திராவிட பாதையில் செல்லும் தவெக? விஜய்யின் ட்வீட்டை பார்த்தீங்களா?
அண்ணாவை நினைவை கூர்ந்து தவெக தலைவர் விஜய் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அண்ணா பிறந்தநாள்
தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் ஆண்டு தோறும் தமிழக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல் இன்று(15.09.2024) அண்ணாவின் 116 வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான முகஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அண்ணாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினர்.
விஜய்
சமூக ஊடகங்களில் பலரும் அண்ணா தமிழநாட்டிற்கு செய்துள்ள தொண்டை நினைவு கூர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தவெக தலைவர் விஜய் அண்ணாவை நினைவு கூர்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
— TVK Vijay (@tvkvijayhq) September 15, 2024
இந்த பதிவில், ” சுயமரியாதைத் திருமணங்களைச் சட்டப்பூர்வமாக்கியது. ‘மதராஸ் மாநிலம்’ என்ற பெயரைத் ‘தமிழ்நாடு’ என மாற்றியது, தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையைச் செயல்படுத்தியது என்று தமிழக அரசியல் களத்தில் புதிய வரலாறு படைத்த பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில், அவர் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய பணிகளை என்றென்றும் போற்றி மகிழ்வோம்.” என தெரிவித்துள்ளார்.
1967 ஆம் ஆண்டு காங்கிரசை வீழ்த்தி பேரறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் முதல்வர் ஆனார். அதற்கு பின் கடந்த அரை நூற்றாண்டு காலமாக அண்ணாவை பின்பற்றும் கட்சிகளான திமுக அதிமுக மட்டுமே தமிழ்நாட்டை ஆட்சி செய்து வருகிறது.
திராவிட அரசியல்
திராவிட கட்சிகளான திமுக மற்றும் அதிமுக, தமிழ் தேசிய கட்சியான நாம் தமிழர், ஹிந்துத்துவ கட்சியான பாஜக என அரசியல் களத்தில் நான்கு முனை போட்டி நிலவும் நிலையில் புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய் எந்த விதமான அரசியல் பாதையில் பயணிப்பார் என பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ஏற்கனவே பாஜக அரசின் நீட் மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக விஜய் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் இஸ்லாமிய மற்றும் கிருத்துவ பண்டிகைகளான ரம்ஜான் மற்றும் ஈஸ்டர்க்கு வாழ்த்து தெரிவித்திருந்த விஜய் ஹிந்துக்களின் பண்டிகையான விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை.
"திமுகவை போல் விஜய் ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. தவெக மற்றுமொரு திராவிட கட்சி" என பாஜக தலைவர்கள் விமர்சித்து வந்தனர். தற்போது, திராவிட கட்சிகளின் முக்கிய கொள்கையான இரு மொழி கொள்கை, சுயமரியாதை திருமணம் ஆகியவற்றை விஜய் மேற்கோள் காட்டி பேசியுள்ளது, விஜய் திராவிடம் சார்ந்த அரசியலை கையிலெடுப்பர் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.