இன்னும் 3 மாதங்களில் அதிகாரிகள் நம் பேச்சை கேட்பார்கள் - செங்கோட்டையன் உறுதி
இன்னும் 3 மாதங்களில் அதிகாரிகள் நம் பேச்சை கேட்கும் காலம் வரும் என தவெகவின் முக்கிய நிர்வாகி செங்கோட்டையன் பேசியுள்ளார்.
தனித்தே போட்டியிடும் தவெக?
2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வர இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணியை தீவிரப்படுத்தியுள்ளன.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல் தேர்தலை எதிர்கொள்ள உள்ள நிலையில், அந்த கட்சியின் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஆனால், வெற்றி பெற்றால் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு வழங்கப்படும் என விஜய் அறிவித்தும், எந்த கட்சியும் தற்போது வரை கூட்டணியில் இணையவில்லை.
விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் இணைக்க மேற்கண்ட முயற்சியும் பலனளிக்கவில்லை. அதேவேளையில், சமீபத்தில் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்த டிடிவி தினகரனும் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இனைந்து விட்டார்.
இதனால், 2026 சட்டமன்ற தேர்தலை கூட்டணி அமைக்காமல் தவெக தனித்தே போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் கரூர் சம்பவத்திற்கு பின்னர் 2 மக்கள் சந்திப்பு நிகழ்வுகளை மட்டுமே மேற்கொண்ட விஜய் சிபிஐ விசாரணை மற்றும் ஜனநாயகன் பட விவகாரத்தில் முடங்கியுள்ளார்.
அதிகாரிகள் நம் பேச்சை கேட்கும் காலம் வரும்
தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், விஜய் எப்படி அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தவெக தற்போது வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டி வருகிறது.
சமீபத்தில் நடந்த தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன் "இன்னும் 3 மாதங்களில் அதிகாரிகள் நம் பேச்சை கேட்கும் காலம் வரும். இதை யாரும் தடுக்க முடியாது.

நான் பல தலைவர்களுடன் பயணித்துள்ளேன். மிகப்பெரிய கூட்டத்தை கூட்ட 1 கோடி ரூபாய் செலவாகும். ஆனால், ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் விஜய்க்கு கூட்டம் கூடுகிறது" என பேசியுள்ளார்.
விஜய்க்கு பிறகு செங்கோட்டையனே தவெகவில் வலிமையான தலைவராக கருதப்படுகிறார். கொங்கு மண்டலத்தில் தவெகவின் செயல்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.