தவெக தேர்தல் அறிக்கை குழு- சுற்றுப்பயண விபரங்கள் வெளியானது
தவெக-வின் தேர்தல் அறிக்கை குழு சுற்றுப் பயண விவரங்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த வெளியிட்டுள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தையும் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டு, மக்களுக்கான அறிக்கை மக்களிடம் இருந்தே உருவாக வேண்டும் என்ற அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இதற்காகக் கூடுதலான தரவுகளைப் பெறவும் பொதுமக்களின் தேவைகள் குறித்து முழு விவரங்களைச் சேகரிக்கவும் தேர்தல் அறிக்கைக் குழுவானது பின்வரும் வகையில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறது.
தேர்தல் அறிக்கைக் குழுவின் சுற்றுப் பயண விவரம்:
1. தெற்கு மண்டலம் : பிப்ரவரி 1, ஞாயிற்றுக்கிழமை மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி. * கூட்டம் நடைபெறும் இடம் : மதுரை
2. கிழக்கு & தென் கிழக்குக் கடற்கரை மண்டலம், பிப்ரவரி 4, புதன்கிழமை விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை (இணைப்பு), ராமநாதபுரம், தூத்துக்குடி. * கூட்டம் நடக்கும் இடம்: கடலூர்
3.மேற்கு மண்டலம் (கொங்கு மண்டலம்) பிப்ரவரி 7, சனிக்கிழமை கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி. * கூட்டம் நடைபெறும் இடம்: கோவை
4. மத்திய மண்டலம் (காவிரி டெல்டா & மைய மாவட்டங்கள்), பிப்ரவரி 9, திங்கள்கிழமை திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை. கூட்டம் நடைபெறும் இடம்: திருச்சி
5.வடக்கு மண்டலம் (சென்னை & சுற்றியுள்ள மாவட்டங்கள்), பிப்ரவரி 11, புதன்கிழமை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை. கூட்டம் நடைபெறும் இடம்: சென்னை

சுற்றுப் பயணத்தின் முக்கிய நடைமுறைகள்:
* நேரடிச் சந்திப்பு: ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள முக்கியமான அரசு சாரா அமைப்புகள் (NGOs) மற்றும் சமூக ஆர்வலர்களைச் சந்தித்தல்.
* கருத்துப் பெட்டி: பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை நேரடியாக வழங்க 'மக்கள் கருத்துப் பெட்டி' அமைத்தல்.
* டிஜிட்டல் கருத்து சேகரிப்பு: பயணம் செய்ய முடியாத மக்களுக்காகச் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளம் வாயிலாகக் கருத்துகளைப் பெறுதல்.
மேலும் இக்குழுவினர் ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள பொதுமக்கள், விவசாயச் சங்கங்களின் உறுப்பினர்கள், நெசவாளர்கள், மீனவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பல்வேறு தொழில் அமைப்புகளைச் சார்ந்தோர் உள்ளிட்டோரைச் சந்தித்துக் கருத்துகளைக் கேட்க உள்ளனர். இவர்களிடம் இருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டு மக்களையும் ஒட்டுமொத்த மாநிலத்தையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட இருக்கிறது.
மேற்கண்ட குழுவினருக்கு அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் முழு ஒத்துழைப்பு நல்குவதோடு, அந்தந்தப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட அமைப்புகளைச் சந்திக்கும் பொழுது தேவையான உதவிகளைச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.