வி.சி.க. மது ஒழிப்பு மாநாட்டில் த.வெ.க பங்கேற்பு?வெளியான தகவல்!
மது ஒழிப்பு மாநாடு அரசியல் கட்சிகளின் கூட்டணியில் ஒருவித மாற்றத்தை ஏற்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.
மது ஒழிப்பு மாநாடு
கடந்த சில தினங்களுக்கு முன்பு விசிக கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,''அக்டோபர் 2-ந்தேதி மகாத்மா காந்தி பிறந்தநாள் அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற உள்ளது .
இந்த மாநாட்டில் மதவாத - சாதியவாத சக்திகளைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் பங்கேற்க அழைப்பு விடுத்திருக்கிறோம் என்று கூறினார். மேலும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக வெற்றிக்கழகத்திற்கு கட்சியின் தலைவர் விஜய்க்கும் திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிலையில் தற்பொழுது இந்த மாநாட்டில் அ.தி.மு.க. நிச்சயம் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் நடிகர் விஜய் கட்சியைப் பொறுத்தவரை உறுதியாக எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை .
நடிகர் விஜய்
ஒருவேளை நடிகர் விஜய் அதில் கலந்து கொள்ளாவிட்டாலும், அவரது கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளலாம் அல்லது அவர் மாநாட்டிற்கு வாழ்த்து செய்தி அனுப்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மது ஒழிப்பு மாநாடு அரசியல் கட்சிகளின் கூட்டணியில் ஒருவித மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பாக இருக்கலாம் என்று அரசியல் ஆலோசகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.