விஜய் போட்டியிட உள்ள தொகுதி இதுதான்; விஜய்யே சொன்னாராம் - தவெக நிர்வாகி தகவல்
2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிட உள்ள தொகுதி குறித்து தவெக நிர்வாகி பேசியுள்ளார்.
விஜய்
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்தினார்.
கட்சி மாநாட்டில் விஜய் பேசிய பேச்சு தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. மாநாட்டை முடித்த பின், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினார்.
சுற்றுப்பயணம்
அதன்பின் கட்சிக்கு கிளை தொடங்கி மாவட்டம் வரை நிர்வாகிகளை நியமித்து கட்சியை கட்டமைக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார். அதன்பின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே ஆளும், ஆண்ட கட்சிகளின் ஊழல் பட்டியலை தயாரிக்க கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது தேர்தல் பிரச்சாரத்தில் ஊழலை எதிர்ப்பை மையமாக வைத்தே பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் எந்த கட்சியுடன் கூட்டணியில் இணைவார், எந்த தொகுதியில் போட்டியிடுவார் என தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தர்மபுரியில் தமிழக வெற்றி கழக வழக்கறிஞர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தர்மபுரியில் போட்டி
இந்த கூட்டத்தில் பேசிய தர்மபுரி மாவட்ட தலைவர் தா.ப.சிவா, ''2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தவெக கட்சியின் தலைவர் விஜய் தர்மபுரியில் உள்ள ஐந்து தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என உறுதியாகத் தெரிவிக்கிறேன்.
எங்கள் தொகுதியில் நீங்கள் நின்று சி.எம் ஆக வேண்டும் என கோரிக்கை வைத்தோம். தர்மபுரியில் தான் போட்டியிடுவேன் என்று விஜய் சொல்லி 10 நாள் ஆகிறது. ஆனால் இன்றுதான் நான் அதை வெளியிடுகிறேன்" என பேசினார்.
விஜய் தர்மபுரி மாவட்டத்தில் போட்டியிட இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.