விஜய் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூற ரெடி; ஆனால்.. தவெக வழக்கறிஞர்
விஜய் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூற தயாராக இருப்பதாக தவெக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
சதிவலை
சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வளாகத்தில் தமிழக வெற்றி கழகத்தின் வழக்கறிஞர் அணி மாநில செயலாளரும், மூத்த வழக்கறிஞருமான அறிவழகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, “தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூரில் கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் காவல்துறை போக்குவரத்தை சீர் செய்யாமலும், போதுமான காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவில்லை. தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராகவும் மிகப்பெரிய சதிவலை பின்னப்பட்டுள்ளது.
கரூர் சம்பவத்தை மாநில காவல்துறை விசாரிக்க கூடாது. 41 பேர் உயிரிழந்ததை சிபிஐ விசாரிக்க வேண்டும், சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை அழித்து விடாமல் பாதுகாக்க வேண்டும்.
சம்பவத்தில் உயிரிழந்த குடும்பங்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் கூற காவல் துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்கிற 3 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நாளை மனு தாக்கல் செய்ய உள்ளார்.
வழக்கறிஞர் கேள்வி
இவ்வழக்கு அக்டோபர் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வர வரும் என எதிர் பார்க்கிறோம், அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம். உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தால் விஜய் கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூற தயாராக உள்ளார்.
ஒரு நபர் விசாரணை ஆணையம் என்பது பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுடைய பிரச்சினைகளை கேட்கும், ஆனால் புலன் விசாரணையால் தான் யார் சதி செயலில் ஈடுபட்டது என கண்டுபிடிக்க முடியும், இவ்வழக்கை விசாரிக்கும் வலிமையான அமைப்பாக சிபிஐ உள்ளது.
சதி வலையில் ஈடுபட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும், குழந்தைகள், பெண்கள் என 41 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களின் மரணத்திலும் அரசியல் செய்யப்படுகிறது. அப்படி அரசியல் செய்பவர்கள் மனிதர்கள் கிடையாது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் பிரச்சாரம் செய்வதற்கு காவல்துறை ஒரு நாளுக்கு முன்னதாகவே அனுமதி கொடுத்தது. துயர சம்பவத்திற்கு பிறகு காவல்துறை கொடுக்கும் விளக்கம் அவர்களுடைய பொறுப்பை தட்டி கழிப்பதாக உள்ளது.
பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமைகளில் இருந்து விலகிச் சென்றுள்ளனர், காவல்துறை அளித்த நிபந்தனைகளை நாங்கள் மீறவில்லை, உயிரிழந்தவர்களின் உடல்களை உடனுக்குடன் உடற்கூராய்வு செய்தது ஏன்? மருத்துவமனையில் ஏற்கனவே இறந்தவர்களின் உடல்கள் இவ்விவகாரத்துடன் சேர்க்கப்பட்டுள்ளதா என சந்தேகம் வருகிறது" என தெரிவித்தார்.