திறனற்ற திமுக அரசால் உயிரிழப்பு சம்பவங்கள் - இனியாவது நடவடிக்கை எடுங்கள் - டி.டி.வி. தினகரன்!
கள்ளச்சாராய விற்பனையை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
டி.டி.வி. தினகரன்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் அருந்தியதால் நான்கு பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வரும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.
கடந்த ஆண்டு விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 20க்கும் அதிகமானோர் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த பிறகும், கள்ளச்சாராயத்தை ஒழிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திறனற்ற திமுக அரசால் உயிரிழப்புச் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.
வலியுறுத்தல்
ஒவ்வொரு முறை ஏற்படும் கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு பிறகும், அரசு நிர்வாகத்தின் தவறுகளை மறைக்க, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம், காவல் உயர் அதிகாரிகள் இடமாற்றம், கள்ளச்சாராயத்தை ஒழிக்க அதிரடி சோதனை எனும் கபட நாடகத்தை வாடிக்கையாக கொண்டிருக்கும் திறனற்ற திமுக அரசின் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, இம்முறையும் அரசு நிர்வாகத்தின் தவறை மறைக்க காரணம் தேடாமல், ஊழல் மற்றும் முறைகேடு புகார், கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களின் வரிசையில் இணைந்திருக்கும் கள்ளச்சாராய விற்பனையையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை இனியாவது மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.