NDAவில் டிடிவி தினகரன்
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக அறிவித்துள்ளார்.
ஏற்கவே தேசிய ஜனநாயக கூட்டணியில் பயணித்து வந்த டிடிவி தினகரன், சமீபத்தில் அதிமுக - பாஜக மீண்டும் கூட்டணி அமைத்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க மறுத்து கூட்டணியில் இருந்து விலகினார்.
இந்நிலையில், இன்று அதிமுக பாஜக கூட்டணி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் செய்ய பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல் தமிழ்நாடு வர உள்ள நிலையில், அவரை சந்தித்து கூட்டணியில் இணைய உள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய டிடிவி தினகரன், "விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை. எங்களுக்குள் நடப்பது பங்காளி சண்டைதான். மக்கள் விரும்பும் நல்லாட்சியை உருவாக்க தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய இருக்கிறோம், ஆதரவு தெரிவிப்பதற்காக பியூஷ் கோயலை சந்திக்க உள்ளோம்" என தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்த டிடிவி தினகரன், விஜய் தலைமையிலான தவெக கூட்டணியில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக மற்றும் தவெக தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.