2026 சட்டமன்ற தேர்தலில் தேனியில் போட்டி? டி.டி.வி.தினகரன் விளக்கம்
2026 சட்டமன்ற தேர்தலில் தேனியில் போட்டியிடுகிறேனா என டி.டி.வி.தினகரன் விளக்கமளித்துள்ளார்.
தேனி
தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியில் அமமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் அமமுக மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், இணை மற்றும் துணை செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள், சார்பு அணி செயலாளர்கள் மற்றும் செய்தி தொடர்பாளர்கள் என பலர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் கட்சி செயல்பாடு குறித்தும், கட்சிப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
டி.டி.வி.தினகரன்
இதற்கு பின் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். இதில் பேசிய அவர், பாஜக அதிமுகவை அழிக்கப்பார்க்கிறது என்பதெல்லாம் பொய். எடப்பாடி பழனிசாமி சுயநலவாதி, சுயநலம் மிக்க மனிதர், பதவி வெறியர். துரோக சிந்தனை படைத்தவர். அதிமுக ஒருங்கிணைய எடப்பாடி பழனிசாமி தடைக்கல்லாக இருக்கிறார். அவர் பொதுச்செயலாளராக இருக்கும் வரை கட்சி ஒருங்கிணைய வாய்ப்பில்லை.
ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற ஆசையில்தான் சசிகலா சுற்றுப்பயணம் செய்கிறார். விரைவில் ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், தமிழ்நாட்டிற்கு சிறப்பு திட்டம் இல்லை என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், இது இந்தியாவின் வளர்ச்சிக்கான பட்ஜெட். ஏழைகள், விவசாயிகள், மாணவர்களுக்கான தொலைநோக்கு பட்ஜெட் என்றார்.
தேனி எனக்கு பிடித்த ஊர் என்பதால் இங்கு வீடு எடுத்து தங்கியிருக்கிறேன். ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, போடியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக வெளியாகும் தகவல் தவறானது. எங்கு போட்டியிடுவது என்ற முடிவை இன்னும் எடுக்கவில்லை. தேனி தொகுதியில் 3 லட்சம் வாக்குகள் பெற்றோம். இனிவரும் தேர்தலில் எங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும். என பேசினார்.