25 எம்.பிக்களை ஜெயிக்க வைத்திருந்தால் பட்ஜெட்டில் தமிழகம் பெயர் இருந்திருக்கும் - அன்புமணி

Anbumani Ramadoss PMK Budget 2024
By Karthikraja Jul 24, 2024 09:30 PM GMT
Report

 பட்ஜெட் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ்

69 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக, பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் பாரதிதாசனை, சென்னை திருவான்மியூரில் உள்ள தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் நேரில் சந்தித்து பேசினார். 

anbumani ramadoss

இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு பாதுகாக்கப்பட வேண்டும். பீகாரைப் போன்று தமிழ்நாட்டில் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இல்லையேல், தரவுகள் இல்லையென்று தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படும்.

சாதிவாரி கணக்கெடுப்பு

மாநில அரசுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கும் அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் இருமுறை தீர்ப்பு வழங்கியிருக்கிறது. மத்திய அரசு கணக்கெடுப்பு எடுத்தால் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது மட்டும்தான் தெரியும். மாநில அரசு கணக்கெடுப்பு நடத்தினால் தான் அந்த மக்களின் வாழ்வாதாரம் குறித்து தெரியவரும். இதுகுறித்து தமிழ்நாடு அரசை பரிந்துரை செய்வதாக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட ஆணைய தலைவர் தெரிவித்திருக்கிறார். 

anbumani ramadoss latest press meet 

ஸ்டாலினுக்கு சமூக நீதி உணர்வு இருக்கிறதா? இல்லையா? என தெரியவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க முடியாது எனக் கூறுவதற்கு என்ன காரணம்? முதலமைச்சருடன் இருக்கும் 5 அமைச்சர்கள் முதலமைச்சரை தவறான வழியில் நடத்துகிறார்கள். அவர்களிடம் சமூக நீதி இல்லை, அவர்கள் வியாபாரிகள். 


ஒருவேளை உச்ச நீதிமன்றம் இந்த இடஒதுக்கீடை ரத்து செய்தால் அன்றே திமுக ஆட்சி போய்விடும். அவ்வாறு நடந்தால் வரலாற்றில் முதலமைச்சர் ஸ்டாலின் பெயர் வேறு விதமாக எழுதப்படும். என பேசியுள்ளார்.

தமிழ்நாடு

மேலும், இந்த பட்ஜெட் 48 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பட்ஜெட். இந்த ரூ.48 லட்சம் கோடியில் தமிழகத்திற்கு எதுவும் வந்திருக்காதா? இந்தியாவிற்கு பொதுவானதுதான் பட்ஜெட். எல்லா மாநிலத்தின் பெயரையும் பட்ஜெட்டில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. அப்படி இருக்கும் நிலையில் தமிழகத்திற்கு இதுதான், கேரளாவிற்கு இதுதான் என ஒவ்வொரு மாநிலத்தின் பெயரையும் சொல்ல முடியாது.

பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயர் வந்திருக்க வேண்டும் என்றால் 25 தொகுதிகளில் எங்களை ஜெயிக்க வைத்திருக்க வேண்டும். பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என விரைவில் தரவுகளுடன் தெரிவிப்போம். பட்ஜெட்டில் எங்களுக்கும் சில வருத்தங்கள் இருக்கிறது என்றார்.