காமராஜர் ஏசி பயன்படுத்தினாரா? திருச்சி சிவா பேசியது உண்மையா?
காமராஜர் குறித்து திமுக எம்பி திருச்சி சிவா பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
திருச்சி சிவா பேச்சு
“பெருந்தலைவர் காமராஜருக்கு அவருடைய இறுதி நாட்களில் ஏசி வசதி அவசியமாக இருந்தது. ஏசி இல்லாத அறையில் தூங்கினால், உடம்பில் அலர்ஜி உண்டாகிவிடும் சூழலில் இருந்தார்.
இதை உணர்ந்த கலைஞர் தன்னுடைய ஆட்சிக்கு எதிராக காமராஜர் பேச சென்ற இடங்களிலும்கூட அவர் தங்கிய அரசினர் பயணியர் விடுதிகளில் ஏசி வசதி செய்து கொடுத்தார். இப்படி தன்னுடைய அரசியல் எதிரிகள் மத்தியிலும்கூட அன்பு பாராட்டியவர் கலைஞர்” என்று திமுக எம்பி திருச்சி சிவா பேசினார்.
இது காங்கிரஸாரிடம் கடும் கொந்தளிப்பை உண்டாக்கியது. காங்கிரஸ் தலைவர் பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி என்று பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
காமராஜர் ஏசி பயன்படுத்தியதையும் அவருக்கு இறுதி நாட்களில் ஏசி அவசியமாக இருந்ததையும், இந்த விஷயத்தில் காமராஜர் மீது தான் அக்கறை கொண்டிருந்ததையும் முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதியுள்ளார்.
காமராஜர் விவகாரம்
சென்னையில் காமராஜர் வாழ்ந்து மறைந்த நினைவில்லத்தில் ஏசி இயந்திரம் உள்ளதை அங்கு எடுக்கப்பட்ட படங்கள், காணொளிகள் வெளிப்படுத்துகின்றன. காமராஜருடன் கால் நூற்றாண்டு காலம் பயணித்தவர் அவருடைய அணுக்க உதவியாளர் வைரவன்.
அவர் எழுதியுள்ள நூல் காமராஜருடன் கால் நூற்றாண்டு காலம். அந்த நூலில் காமராஜர் வீட்டில் குளிர் சாதன வசதி இருந்ததை அவர் எழுதியுள்ளார். இதன்மூலம், காமராஜர் தன்னுடைய இறுதி நாட்களில் ஏசி வசதியை பயன்படுத்தினார் என்பது உறுதியாகிறது.
ஆனால், தனக்கென்று ஒரு குடும்பமோ, சொத்துகளோ சேர்க்காதவர் காமராஜர். தமிழ்நாடுக்காகவும், தமிழர்களுக்காகவும் தன்னுடைய முழு வாழ்வையும் ஒப்பளித்தவர். அப்படிப்பட்ட தன்னுடைய உடல்நலன் சார்ந்து இறுதி நாட்களில் ஏசியைப் பயன்படுத்தியதில் என்ன தவறு?