எடப்பாடி பயணம்; அது சுந்தரா டிராவல்ஸ் இல்லை.. ஸ்டாலின் அதுக்கு சரிப்பட மாட்டார் - அதிமுக பதிலடி
எடப்பாடி பழனிசாமி எழுச்சி பயணம் சுந்தரா டிராவல்ஸ் அல்ல என ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.
சுந்தரா டிராவல்ஸ்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், " இன்றைக்கு ஸ்டாலின் வயிற்று எரிச்சலால், இன்றைக்கு வாய்க்கு வந்ததை எல்லாம் வசைப்பாடி இருக்கிறார்.
எடப்பாடி பற்றி ஸ்டாலின் வயிற்றெரிச்சல் வார்த்தைகளை நாம் எப்படி மதிப்பிடுவது? முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே? நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் எண்ணம் முழுக்க வருங்கால முதலமைச்சர் எடப்பாடியாரின் எழுச்சி பயணத்தை சுற்றிய தான் இருக்கிறது.
அதற்கு காரணம் அங்கே மக்கள் கடல் அலை போல திரண்டு வரவேற்கிற காட்சியை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஸ்டாலின் எதிர் கட்சி தலைவராக இருந்த பொழுது அன்றைக்கு கருப்பு பெட்டி வைத்து ஏமாற்றியது போதாது என்று,
இன்னைக்கு ஒரு துண்டுசீட்டில் 46 சேவைகள் என அச்சடித்து யாரை ஏமாற்றுவதற்கு நீங்கள் புறப்பட்டு இருக்கிறீர்கள்? இந்த நான்கு மாதத்தில் உங்களால் செய்ய முடியுமா? நான்கரை ஆண்டு காலம் நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் என்பதுதான் இந்த மக்களுடைய கேள்வி?
ஆர்.பி.உதயகுமார் பதிலடி
முதலமைச்சர் விமர்சனம் செய்யலாம். ஆனால் வயிற்று எரிச்சலால் வசைபாடக்கூடாது. அதை மக்கள் வரவேற்க மாட்டார்கள். இன்றைக்கு உங்கள் ஆட்சிதான். ICU வில் வென்டிலேட்டரில் உள்ளது. உங்களால் புரிந்து கொள்ள முடியாமல், அதிமுக வெற்றியை கேள்விக்குறி என்று சொல்லிவிட்டு,
எடப்பாடியாரை பற்றி காமெடி படத்தில் வருகிற அதற்கெல்லாம் நீ சரிப்பட்டு வர மாட்டாய் என்று வயித்தெரிச்சலிலே வசை பாடி இருக்கிற ஸ்டாலின் அவர்களே? நீங்கள் எதுக்குமே சரிப்பட மாட்டீர்கள் என்று மக்கள் சொல்லுகிறார்களே அது உங்கள் காதுக்கு கேட்கிறதா? சுந்தரா டிராவல்ஸ் சென்று நீங்கள் கேலி பேசி இருக்கிறீர்களே
இது சுந்தரா டிராவல்ஸ் அல்ல ஸ்டாலின் அவர்களே? மக்களின் டிராவல்ஸ், மக்களின் உயிர்நாடி டிராவல்ஸ், மக்களின் நம்பிக்கை டிராவல்ஸ், உங்கள் ஆட்சிக்கு முடிவு கட்டப் போகிற இந்த மக்களின் நம்பிக்கை டிராவல்ஸ்சை நீங்கள் குறைத்து மதிப்பிட வேண்டாம்" என தெரிவித்துள்ளார்.