வெள்ளை மாளிகையில் தங்க விரும்பாத ட்ரம்ப்பின் மனைவி - என்ன காரணம் தெரியுமா?
மெலனியா ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் அதிகம் வசிக்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளை மாளிகை
அமெரிக்காவில் 47வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜனவரி 20 ஆம் தேதி அவர் பதவியேற்கவுள்ளார். எனவே, அதற்கான பணிகள் வெள்ளை மாளிகையில் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், ட்ரம்பின் மனைவி மெலனியா ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் அதிகம் வசிக்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளை மாளிகை அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமாகக் கருதப்படுகிறது.
மெலனியா ட்ரம்ப் வழக்கம்
18 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மாளிகையில் 130க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. மெலனியா ட்ரம்ப், நியூயார்க் நகரம் மற்றும் புளோரிடாவின் பாம் பீச் இடையே தனது பெரும்பாலான நேரத்தைச் செலவிட திட்டமிட்டுள்ளார். தன் சொந்தத் தேவைகளுக்காகக் கவனம் செலுத்துவார் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மெலனியா பேசுகையில், “இந்த முறை எனக்கு பதற்றம் இல்லை. நான் பதற்றம் இல்லாமல் வெள்ளை மாளிகைக்குச் செல்ல உள்ளேன். வெள்ளை மாளிகையில் என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியும். இந்த முறை அனுபவத்தோடு செல்வதால் பிரச்னை இல்லை” என தெரிவித்துள்ளார்.
2016-ஆம் ஆண்டு டொனால்ட் ட்ரம்ப் முதல்முறையாக அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, மெலனியா ஆரம்பத்தில் வெள்ளை மாளிகைக்குச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.