இந்தியா – பாகிஸ்தான் சண்டையை எப்படி நிறுத்தினேன் தெரியுமா? டிரம்ப் தகவல்
இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியது குறித்து டிரம்ப் விளக்கமளித்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான்
இந்தியா - பாகிஸ்தான் இடையே தாக்குதல் நடந்து வந்த நிலையில், இரு நாடுகளும் தாக்குதல் நிறுத்தத்தை அறிவித்தன. இதனால், இரு நாட்டு எல்லையோரத்தில் அமைதி திரும்பியது.
தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் ராணுவத் தலைமை இயக்குநர்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
டிரம்ப் விளக்கம்
”இருநாட்டிடமும், நாங்கள் உங்களுடன் நிறைய வர்த்தகம் செய்ய இருக்கிறோம். போரை நிறுத்தினால் வர்த்தகம் செய்வோம். இல்லை என்றால் உங்களுடன் வர்த்தகம் செய்யமாட்டோம் எனத் தெரிவித்து இரு நாட்டின் போரை நிறுத்தினேன். வர்த்தகத்தை நான் பயன்படுத்தியதுபோல் வேறு யாரும் பயன்படுத்திருக்க மாட்டார்கள்.
உடனே அவர்கள் தங்கள் சண்டை நிறுத்துவதாக அறிவித்தார்கள். அது ஒரு மோசமான அணு ஆயுதப் போராக இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். மில்லியன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம். ஆனால், அந்த அணு ஆயுத மோதலை நாங்கள் நிறுத்திவிட்டோம்.
நாங்கள் பாகிஸ்தானுடன் நிறைய வர்த்தகம் செய்யப் போகிறோம். இந்தியாவுடன் நிறைய வர்த்தகம் செய்யப் போகிறோம். நாங்கள் இப்போது இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.