அதிபர் ட்ரம்பின் பதவி இனி தப்புமா?.. பார்லி ஓட்டெடுப்பில் அதிரடி திருப்பம்!

president america run
By Jon Jan 16, 2021 06:40 AM GMT
Report

கடந்தாண்டில் நவம்பர் 3-ல் நடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின், ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவர், வரும், 20ம் தேதி அவர் அதிபராக பதவியேற்க உள்ளார். இதற்கிடையே, தேர்தலில் மோசடி நடந்துள்ளது என, குடியரசு கட்சியைச் சேர்ந்த, அதிபர், டொனால்டு டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார்.

இதன்பின்னர், தேர்தல் முடிவுகளை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்குகளை, நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்தன. இதனிடையே, தேர்தல் முடிவுகளை உறுதி செய்வதற்காக, பார்லியின் கூட்டுக் கூட்டம், கடந்த, 6ம் தேதி நடந்தது. அப்போது, டிரம்பின் ஆதரவாளர்கள், 'கேப்பிடோல்' எனப்படும், பார்லிமென்ட் வளாகத்துக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

மேலும், பார்லிமென்ட் கட்டடம் இடம்பெற்றுள்ள, கேப்பிடோஸ் ஹில் பகுதியிலும் வன்முறையில் ஈடுபட்டனர். இதில், ஐந்து பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இதையடுத்து, டிரம்ப் வரும் 20ம் தேதி பதவியில் இருந்து விலக உள்ள நிலையில், 'வன்முறையைத் தூண்டும் வகையில் அவர் பேசியதால், அதிபர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என, ஜனநாயகக் கட்சி வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர், நான்சி பெலோசிக்கு, மைக் பென்ஸ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஒருவருக்கு தண்டனை அளிப்பதற்காக, 25வது சட்டப் பிரிவு சேர்க்கப்படவில்லை. ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்த விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, டிரம்பை பதவியில் இருந்து நீக்கும் நடவடிக்கையை துணை அதிபர், மைக் பென்ஸ் எடுக்க வேண்டும் என பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேறியது. தீர்மானத்துக்கு ஆதரவாக, 223 பேரும், எதிராக, 205 பேரும் ஓட்டளித்தனர். குடியரசு கட்சியைச் சேர்ந்த ஒருவர், தீர்மானத்துக்கு ஆதரவாக ஓட்டளித்துள்ளார்.

அதே நேரத்தில், ஐந்து பேர் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை. மேலும், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய குற்றத்துக்காக, அதிபர் டிரம்புக்கு எதிராக பார்லியில் கண்டனத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் மீதான விவாதம் நடக்க உள்ளது.

அமெரிக்க வரலாற்றிலேயே, ஒரு அதிபருக்கு எதிராக, இரண்டாவது முறையாக, கண்டனத் தீர்மானம் மீது, பார்லியில் விவாதம் நடப்பது இதுவே முதல் முறையாகும். ஜோ பைடனுக்கு எதிராக பொய் வழக்குகள் தொடரும்படி, ஐரோப்பிய நாடான உக்ரைனின் அதிபருக்கு நெருக்கடி கொடுத்ததாக, டிரம்ப் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

அதற்காக, அந்த நாட்டுக்கு வழங்க வேண்டிய ராணுவ உதவியை அவர் நிறுத்தி வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. தற்போது அவை நிராகரிக்கப்பட்டுவிட்டது.