தஞ்சாவூர் - திருச்சி மேம்பாலம் திடீரென சரிந்து விழுந்தது - மக்கள் பதற்றம்!
திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் சுவர்கள் திடீரென இடிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேம்பாலம்
தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை 15 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது. அது செங்கிப்பட்டி காவல் நிலைய சரகத்துக்கு உள்பட்ட சானூரப்பட்டி முதன்மைச் சாலையிலும் மேம்பாலம் அமைக்கப்பட்டது.
இப்பகுதி தஞ்சாவூர் - திருச்சி வழித்தடம் மட்டுமல்லாமல், தெற்கே கந்தர்வகோட்டை, வடக்கே பூதலூர், திருக்காட்டுப்பள்ளி வழித்தடங்களுக்கும் முக்கியமான சந்திப்பாக உள்ளது. இதில் சானூரப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே மேம்பாலத்தின் தெற்கு பகுதியின் சுவர் இன்று காலை 6 மணி அளவில் சரிந்து விழுந்தது.
போக்குவரத்து பாதிப்பு
இதனை தொடர்ந்து, தகவலறிந்த நெடுஞ்சாலை துறையினர், காவல் துறையினர், வருவாய்த் துறையினர் உள்ளிட்டோர் நிகழ்விடத்துக்குச் சென்று பார்வையிட்டனர். இதையடுத்து, மேம்பாலத்தின் தெற்கு பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, அணுகு சாலை வழியாகத் திருப்பி விடப்பட்டது.
மேலும், திருச்சி வழித்தடத்தில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் மேம்பாலத்தின் வடக்குப் பகுதி வழியாக அனுமதிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து, சென்னை ஐஐடியில் இருந்து வல்லுநர்கள் வந்து ஆய்வு செய்த பிறகு அவர்களுடைய ஆலோசனைகளின் அடிப்படையில், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, விரைவில் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்படும் என நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.
முதலமைச்சர் பயணம் வழி மாற்றம்?
திருவாரூரில் காட்டூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்திற்கு இந்த தேசிய நெடுஞ்சாலை வழியாக தான் பயணம் மேற்கொண்டார்.
மீண்டும் அவர் அதே தேசிய நெடுஞ்சாலை வழியாக அவர் திரும்ப இருந்த நிலையில் மேம்பாலம் சரிந்துள்ளதால் முதலமைச்சருக்கு வேறு பாதையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.