எஸ்.ஆர்.எம் ஹோட்டல் விவகாரம் : விஜயகாந்தை பழி வாங்கியது போல நடந்து கொள்கிறது அரசு - அண்ணாமலை கண்டனம்
திருச்சியில் உள்ள எஸ்.ஆர்.எம் ஹோட்டலை அரசு அதிகாரிகள் கைப்பற்ற சென்றனர்.
எஸ்.ஆர்.எம் ஹோட்டல்
திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் அருகே உள்ள ரேஸ்கோர்ஸ் சாலையில் எஸ்.ஆர்.எம் நிர்வாகத்துக்கு சொந்தமான ஹோட்டல் இயங்கி வருகிறது. இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் அதனை நடத்தி வருகிறார்.
தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறைக்கு சொந்தமான அந்த இடத்தை, கடந்த 1995 ம் ஆண்டு எஸ்.ஆர்.எம் ஹோட்டல் 30 ஆண்டுக்கால குத்தகைக்கு எடுத்துள்ளது. ஆண்டுக்கு 75 லட்சம் ரூபாய் வாடகை என்கிற ஒப்பந்தப்படி இந்த குத்தகை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குத்தகை காலம் அன்று (13.06.24) முடிவடைந்த நிலையில், எஸ்.ஆர்.எம் நிர்வாகத்துக்கு முன்னதாகவே சுற்றுலாத்துறை சார்பில் அவ்வப்போது நினைவூட்டல் கடிதம் அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது.
நிர்வாகம் மறுப்பு
குத்தகை காலம் முடிவடைந்ததையடுத்து இன்று ஹோட்டலுக்கு வந்த சுற்றுலாத்துறை அதிகாரிகள், ஹோட்டலை தங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுள்ளனர். ஆனால், ஹோட்டல் நிர்வாகத்தினர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, ஹோட்டலுக்கு வந்த திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, ஹோட்டல் நிர்வாகத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ஹோட்டல் நிர்வாகத்தினர் ஹோட்டலை ஒப்படைக்க மறுத்ததோடு, கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து சுற்றுலாத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "சுமார் 38 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளார்கள். ஏற்கெனவே பலமுறை நினைவூட்டியும் அவர்கள் ஹோட்டலை தர மறுக்கிறார்கள்" எனத் தெரிவித்தனர்.
நீதிமன்ற உத்தரவு
இதனிடையே, ஹோட்டல் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், 'ஹோட்டலை அரசு கையகப்படுத்துவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்' என வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 'வரும் 18-ம் தேதி செவ்வாய்க்கிழமை வரை ஹோட்டலை கையகப்படுத்தக் கூடாது' என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவையடுத்து ஹோட்டலை கைப்பற்ற வந்த சுற்றுலாத்துறை அதிகாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். நீதிமன்ற உத்தரவை அறிந்த இந்திய ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்கள், ஹோட்டலில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சுற்றுலாதுறைக்குச் சொந்தமான இடத்தில் எஸ்.ஆர்.எம் நிர்வாகத்தினர் அமைத்துள்ள ஹோட்டலை கையகப்படுத்த வந்த அதிகாரிகளால், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்பட்டிருக்கிறது.
அண்ணாமலை கண்டனம்
மேலும் இந்த விவகாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே 30 ஆண்டுகளாக இயங்கி வரும் எஸ்.ஆர்.எம் ஹோட்டலை இழுத்து மூடும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது.
எஸ்.ஆர்.எம் நிறுவனர் பாரிவேந்தர் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் திமுக அமைச்சர் கே.என்.நேரு மகன் அருண் நேருவை எதிர்த்து போட்டியிட்டதால் பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.
ஆட்சி அதிகார திமிரில் அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது திமுகவுக்கு வழக்கமான ஒன்று. மறைந்த விஜயகாந்தின் மண்டபத்தை இடித்து இது போல் பழி தீர்த்து கொண்டது திமுக என தெரிவித்துள்ளார்.
இது குறித்து எஸ்.ஆர்.எம் நிர்வாகத்துக்கு ஆதரவாக அரசியல் தலைவர்கள் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.