அம்பானி வீட்டு நிகழ்ச்சியில் கொள்ளையடிக்க சென்ற திருச்சி திருடர்கள் - சிக்கியது எப்படி?
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட திருச்சியை சேர்ந்த 5 பேரை குஜராத் போலீசார் கைது செய்துள்ளனர்.
கொள்ளை சம்பவம்
குஜராத் மாநிலம் ராஜ்கோட் மற்றும் ஜாம்நகரில் கார் கண்ணாடியை உடைத்து லேப்டாப் மற்றும் ரூ.10 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த குஜராத் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும், கார் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் உள்ள அனைத்து கேமராக்களின் பதிவுகளையும் ஆய்வு செய்தனர். இதில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்களது படங்கள் அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டது. இதில் ஒரு குற்றவாளி டெல்லியில் போலீசாரிடம் சிக்கினார்.
அம்பானி வீட்டு நிகழ்ச்சி
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஜெகன், தீபக், குணசேகர், முரளி, ஏகாம்பரம் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், இவர்கள் திருச்சி மாவட்டம் ராம்ஜிநகரை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது.
இந்த கொள்ளையர்கள் அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியில் உள்ளே புகுந்து கொள்ளையடிக்கும் நோக்கில் திருச்சியிலிருந்து புறப்பட்டு ஜாம்நகர் வந்துள்ளனர். ஆனால் அங்கு அதிகளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து பல திட்டங்கள் போட்டும் உள்ளே செல்ல முடியாததால் ஜாம்நகர் வந்து திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.