தமிழ்நாட்டில் பிரதமர் மோடிக்காக கோயில் கட்டிய விவசாயி - என்ன காரணம் தெரியுமா?
பிரதமர் மோடிக்காக தமிழ்நாட்டில் விவசாயி கோயில் கட்டியுள்ளார்.
திருச்சி
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே, எரகுடி கிராமத்தை சேர்ந்தவர் பி.சங்கர். துபாயில் வேலை பார்த்து வந்த அவர் சொந்த ஊர் திரும்பியதும் விவசாயத்தில் ஈடுபட்டார். 2019 ம் ஆண்டு பிரதமர் மோடிக்காக சொந்த நிலத்தில், இந்தியாவிலேயே முதல் முதலாக அவரது உருவச்சிலை அமைத்து, கோவில் கட்டினேன் என்றார்.
இது குறித்து சங்கர் கூறியதாவது, பிரதமர் மோடியின் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி உஜ்வாலா யோஜனா, வீட்டுக்கு ஒரு கழிப்பறை போன்ற நலத்திட்டங்களால் ஈர்க்கப்பட்டதாகவும், இதற்காக சுமார் 1.25 லட்சம் ரூபாய் சொந்த செலவில் ஆறு மாதங்களில் கோயில் கட்டினேன். அதனால், அவரை கடவுளாக நினைத்து தினமும் இருபுறமும் விளக்கேற்றி பூஜை செய்து, வழிபாடு நடத்தி வருகிறேன்.
மோடி
ஒவ்வொரு சாகுபடியிலும் கிடைக்கும் லாபத்தில் 10 ஆயிரம் ரூபாய் வீதம் எடுத்து வைத்து, ஐந்து ஆண்டுகளாக கணிசமான தொகை வைத்துள்ளேன். எனதுதோட்டத்தில் விளையும் பொருட்களை எல்லாம் கோயிலுக்கு கொண்டு வந்து படையலிட்ட பிறகு தான் வியாபாரத்திற்கு கொண்டு செல்வேன்.
அவர் மூன்றாவது முறை பிரதமாக வேண்டும் என்று பழனி மலை முருகனிடம் வேண்டுதல் வைத்திருந்தேன். அந்த வேண்டுதல் தற்போது நிறைவேறி உள்ளதால், வரும் தை மாதம் முடிந்த பிறகு தங்கத்தேர் இழுத்து நேர்த்திக்கடனைச் செலுத்த உள்ளேன். மேலும், 1000 பேருக்கு கிடா வெட்டி அன்னதானம் வழங்க, என் வயலில் விளைந்த நெல்லில் 10 மூட்டை வைத்துள்ளேன். இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தவும் ஆசை உள்ளது. என கூறினார்.
இந்த கோயிலில் 8 x 8 அடிக்கு ஓடுகள் வேயப்பட்ட கூரை இருக்கிறது. பிரதமர் மோடியின் மார்பு அளவு சிலை இருக்கும். மேலும் கடவுள்களின் படங்களும் அதற்கு மேல் வரிசையில் காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, அமித் ஷா ஆகியோரின் படங்களும் இதில் உள்ளன.