விஜய் இறந்துவிட்டதாக நினைத்து வருந்தும் சிறுவன் - பிகில் படத்தால் மனதளவில் பாதிப்பு
பிகில் படம் பார்த்த சிறுவன் விஜய் இறந்துவிட்டதாக நினைத்து மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார்.
பிகில்
அட்லீ இயக்கத்தில், விஜய், நயன்தாரா, விவேக், ஆனந்த்ராஜ், யோகி பாபு ஆகியோரின் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பிகில்.
கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவான இந்த படத்தில் விஜய் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அப்பா கதாபாத்திரத்தில் நடித்த மைக்கேல் ராயப்பன் இறந்து விடுவதாக காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
பாதிக்கப்பட்ட சிறுவன்
இந்த காட்சியை தொலைக்காட்சியில் பார்த்த திருச்சியைச் சேர்ந்த 16 வயதே ஆன அறிவுத்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட சிறுவன் அமான் மனதளவில் மிகுந்த பாதிப்பை அடைந்துள்ளார். விஜய்யின் அப்பா இறந்துவிட்டால், அவரைப்பார்த்து ஆறுதல் சொல்லவேண்டும் என அடிக்கடி வீட்டை விட்டு ஓடி வந்துவிடுவதாக சிறுவனின் பாட்டி பாத்திமா வேதனையுடன் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய சிறுவனின் பாட்டி பாத்திமா, "ஒரு வயதிலேயே சிஅமான் அறிவு திறன் பாதிக்கப்பட்டபோதும் அந்த குறையே தெரியாமல் ஒரு தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தோம். ஒரு நாள் இரவில் பிகில் படத்தை தனியாக பார்த்தார்.
அந்த படத்தில் விஜய் இறப்பது போல வந்த காட்சியை பார்த்ததில் இருந்து அமான் மனதளவில் பாதிக்கப்பட்டு, விஜய்யின் அப்பா இறந்துவிட்டார், அவருக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார். அது சினிமாதான். அவர் நன்றாகத்தான் இருக்கிறார் என்று எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்காமல், விஜய் பார்க்க அடிக்கடி வீட்டை விட்டு வெளியே ஓடிவந்துவிடுகிறார்.
விஜய் சந்திக்க மனு
இதனால் விழுப்புரத்தில் ஒரு விடுதி ஒன்றில் அவரை சேர்ந்திருந்தோம். ஆனால், அங்கிருந்தும் சுவர் ஏறி குதித்து தப்பித்து விஜய்யை தேடி சென்னை வந்துவிட்டார். வேறு வழியில்லாமல், மும்பைக்கு அனுப்பி விடலாம் என நினைத்தோம், ஆனால் ரயிலில் போகும் வழியிலேயே இறங்கி சென்னைக்கு வந்துவிட்டார். விஜய்யின் வீட்டின் முன்னால் சுற்றித்திரிந்த எனது பேரனை பிடித்து விசாரித்த காவல்துறையினர் எனக்கு தகவல் அளித்தனர்.
என் பேரனின் நிலைமையை பார்த்த அங்கிருந்த காவலர், விஜய் இன்று பனையூர் வருவதாக சொல்லி தவெக பொதுச்செயலாளர் ஆனந்திடம், பேரனின் நிலை குறித்து மனு அளிக்க சொன்னார். இந்த மனுவால் விஜய், என் பேரனை சந்தித்தால், அவனின் மனம் மாற வாய்ப்பு உள்ளது என சிறுவன் அமானின் பாட்டி பாத்திமா தெரிவித்துள்ளார்.