’பெல்’ அதிகாரி கள்ளத் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை - என்ன காரணம்?
பெல் நிறுவன பொது மேலாளர் ஒருவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளார்.
பெல் நிறுவன பொது மேலாளர்
திருச்சி, திருவெறும்பூர் அருகே மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத மிகுமின் நிறுவனம் (பெல்) செயல்பட்டு வருகிறது. இங்கு 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர்.
இங்கு சண்முகம் (50), இணைப்பில்லா குழாய் வடிவமைப்பு (எஸ்எஸ்டிபி) பிரிவில் பொது மேலாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் வழக்கம்போல் பணிக்கு சென்ற மேலாளர் வீடு திரும்பவில்லை. உடனே, அவரது மனைவி பார்வதி மீண்டும் பெல் நிறுவன உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தற்கொலை
அதன் அடிப்படையில், அங்கிருந்த ஊழியர்கள் சண்முகம் அறைக்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு சோபாவில், நெற்றிப் பொட்டில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதனையடுத்து போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சண்முகத்துக்கு இருதயநோய் பிரச்சினை இருப்பதும், அதற்குரிய சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்துள்ளது. மேலும், அவர் பயன்படுத்திய துப்பாக்கிக்கு உரிமம் இல்லை.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, சண்முகம் டெல்லியில் பணியாற்றியபோது அதனை வாக்கியிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து சண்முகம் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.