வெடித்த கலவரம்; 5 நாள்களுக்கு முழு ஊரடங்கு - இணைய சேவை முடக்கம்
8 மாவட்டங்களில் 5 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு மற்றும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
கலவரம்
மணிப்பூரில் பல்வேறு பழங்குடியின பிரிவைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இதில், நாகாக்கள் மற்றும் குக்கிகள் அடங்குவர். மாநிலத்தின் மக்கள்தொகையில் 53 விழுக்காடு மெய்தி சமூகத்தினரும் உள்ளனர்.

இந்நிலையில், பழங்குடியின பட்டியலில் மெய்தி சமூகத்தினர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கு மலைவாழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து, உக்ருல், கங்க்பொக்பி, சந்தேல் உள்ளிட்ட மாவட்டங்களில் பேரணி நடத்தினர். மேலும், சுராசந்த்பூர் டவுனில் வீடுகள் சூறையாடப்பட்டன.
முழு ஊரடங்கு
இந்த எதிர்ப்பு முற்றி மோதலாக மாறியது. 25-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன. மோதல்களை தடுக்க காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதில் பொதுமக்கள் சிலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதனையடுத்து, கலவரத்தின் காரணமாக சுராசந்த்பூர், பிஸ்னுபூர், இம்பால் உள்ளிட்ட இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு 144 உத்தரவு மற்றும் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.