ஒரு லிட்டர் ரசாயனத்தில் 500 லிட்டர் போலி பால்.. 20 ஆண்டுகளாக நடந்த விற்பனை - சிக்கியது எப்படி?
ஒரு லிட்டர் ரசாயனத்தின் மூலம் 500 லிட்டர் போலி பால் தயாரித்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
போலி பால்
உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள அமீர்பூர் அகோரா என்ற கிராமத்தில் போலியாகப் பால் மற்றும் பாலாடைக்கட்டிகள் தயாரிக்கும் குடோன் உள்ளது. இந்த குடோனில் பால் மற்றும் பாலாடைக்கட்டிகள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த குடோனில் கலப்பட முறையில் பால் மற்றும் பாலாடைக்கட்டிகள் தயாரிப்பதாக அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தினர்.
அந்த சோனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகினர். அங்குப் போலியாகப் பால் தயாரிப்பதற்காகக் கொழுப்பு நீக்கப்பட்ட பால், காஸ்டிக் பொட்டாஷ், மோர் பவுடர், சோர்பிடால் மற்றும் சோயா உள்ளிட்ட இரசாயனம் மற்றும் கலப்படப் பொருட்களைக் கண்டுபிடித்தனர்.
கலப்படம்
அதுமட்டுமில்லாமல் ஒரு லிட்டர் ரசாயனத்தின் மூலம் 500 லிட்டர் போலி பால் தயாரித்து வந்துள்ளனர்.மேலும் 21 ஆயிரத்து 700 கிலோ எடை கொண்ட ஏழு வகையான ரசாயனப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த 20 ஆண்டுகளாகப் போலி பால் தயாரித்து விற்பனை செய்து வந்த அஜய் அகர்வால் உட்பட 3 பேரைக் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.