குழந்தைகளை குறிவைத்து தாக்கும் தக்காளி காய்ச்சல் - பெற்றோர்களே கவனம்!
இந்தியாவில் 82 குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளது என்று லென்செட் தரவுகள் குறிப்பிட்டுள்ளது.
தக்காளி காய்ச்சல்
கொரோனாவின் அடிப்படை அறிகுறிகளான காய்ச்சல், சோர்வு, உடல் வலி மற்றும் தோலில் தடிப்புகள் ஆகியவற்றுடன் தக்காளி காய்ச்சலும் பரவி வருகிறது. ஆனால் தக்காளி காய்ச்சலுக்கும் கொரோனாவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
தக்காளி காய்ச்சல்,என்று அழைக்கப்படும் இந்த தொற்று நோய் குடல் வைரஸ்களால் ஏற்படுகிறது. பெரும்பாலும் 1-5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. பெரியவர்களுக்கு இந்த நோய் அரிதாக பாதிக்கிறது.
கேரளாவில் மையம்
ஏனெனில் பெரியவர்களிடம் இந்த வைரஸிலிருந்து பாதுகாக்கும் அளவுக்கு வலுவான நோயெதிர்ப்பு அமைப்புகள் இருக்கும்.கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் மே 6, 2022 அன்று தக்காளிக் காய்ச்சல் முதன்முதலில் பதிவாகியுள்ளது.
லென்செட் நிறுவனம் தக்காளி காய்ச்சல் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஜூலை 26, 2022 நிலவரப்படி 5 வயதுக்குட்பட்ட 82க்கும் மேற்பட்ட குழந்தைகள் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அறிகுறிகள்
ஒடிசாவில் 26 குழந்தைகளுக்கு கை, கால் மற்றும் வாய் நோய் (HFMD) இருப்பதை புவனேஸ்வரில் உள்ள பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் கண்டறியந்துள்ளது. இருப்பினும், கேரளா, தமிழ்நாடு மற்றும் ஒடிசாவைத் தவிர, இந்தியாவில் வேறு எந்த பகுதியும் இந்த வைரஸால் பாதிக்கப்படவில்லை.
உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி , காய்ச்சல், சோர்வு, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு , நீரிழப்பு, மூட்டுகளில் வீக்கம், உடல் வலி,புண்கள் மற்றும் கைகள், கால்களில் கொப்புளங்களுடன் சொறி போன்ற அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது.
தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பிறகு 5-7 நாட்கள் நோயாளிகளை தனிமைப்படுத்தவும், ஓய்வெடுக்கவும், ஏராளமான திரவ உணவுகளை உட்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகின்றனர். எரிச்சல் மற்றும் கொப்பளங்களின் நிவாரணத்திற்காக சூடான நீரில் ஒத்தடம் கொடுக்கச் சொல்கின்றனர்.