என்னை கூட மோசமாக பேசுகின்றனர்..கஸ்தூரி செய்தது குற்றமாக கருதவில்லை - சீமான் பேச்சு!
நடிகை கஸ்தூரி பேசியதை அவ்வளவு பெரிய குற்றமாக கருதவில்லை என சீமான் தெரிவித்துள்ளார்.
கஸ்தூரி
பிராமணர்களைப் பாதுகாக்க புதிய சட்டம் இயற்ற வேண்டி இந்து மக்கள் கட்சி சார்பில், கடந்த நவம்பர் 3 ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி, தெலுங்கர்கள் குறித்து பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், கஸ்தூரி தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். இதனையடுத்து கஸ்தூரி மீது பல்வேறு இடங்களில் காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.
சீமான்
அவர் மீது பல பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, தலைமறைவாக உள்ள கஸ்தூரியை தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சுதாரித்த கஸ்தூரி முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், கஸ்தூரி மீதான நடவடிக்கை அரசியல் பழிவாங்கல் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தனது பேச்சுக்கு நடிகை கஸ்தூரி வருத்தம் தெரிவித்த பிறகு அதை விட்டுவிடலாம்.
அவர் பேசியதை விட மோசமாக பலர் பேசியுள்ளனர். என்னைப் பற்றி கூட மோசமான முறையில் இணையத்தில் பலர் பேசியிருப்பதை நீங்கள் பார்க்கலாம். நடிகை கஸ்தூரி பேசியதை அவ்வளவு பெரிய குற்றமாக நான் கருதவில்லை. அவர் மீதான நடவடிக்கையை அரசியல் பழிவாங்கலாகவே பார்க்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.