நடிகை கஸ்தூரி கைதாகிறாரா? முன்ஜாமீன் மனு வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு
முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதால் நடிகை கஸ்தூரி விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை கஸ்தூரி
பிராமணர்களைப் பாதுகாக்க புதிய சட்டம் இயற்ற வேண்டி இந்து மக்கள் கட்சி சார்பில், கடந்த நவம்பர் 3 ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி, தெலுங்கர்கள் குறித்து பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், கஸ்தூரி தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார்.
கஸ்தூரி மீது வழக்கு
இதனையடுத்து கஸ்தூரி மீது பல்வேறு இடங்களில் காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், கலவரம் ஏற்படும் வகையில் பேசுதல் போன்ற பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து விசாரிப்பதற்காக சென்னை போயஸ்கார்டனில் உள்ள நடிகை கஸ்தூரி வீட்டிற்கு சம்மன் வழங்க காவல்துறை சென்ற போது அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது கஸ்தூரியின் செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஜாமீன் மனு தள்ளுபடி
இதனையடுத்து தலைமறைவாக உள்ள கஸ்தூரியை தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதனை தொடர்ந்து கஸ்தூரி முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். கஸ்தூரியின் முன் ஜாமீன் மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, முன் ஜாமீன் வழங்க தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, முன் ஜாமீன் வழக்கில் இன்று காலை தீர்ப்பு வழங்கிய நீதிபதி, முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தார். முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் நடிகை கஸ்தூரி விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.