ஆளுநர் அதிகாரம் குறித்த கேள்வி - குரூப் 2 கேள்வித்தாளால் வெடித்த சர்ச்சை
குரூப் 2 தேர்வில் ஆளுநர் தொடர்பான கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குருப்-2 தேர்வு
குருப்-2 மற்றும் குருப்-2ஏ பதவிகளில் உள்ள 2,327 காலியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த முதல்நிலைத் தேர்வு தமிழகம் முழுவதும் 2,763 மையங்களில் இன்று(14.09.2024) நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணிக்கு முடிவடைந்தது.
தேர்வெழுத 7,93,966 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 5,81,305 பேர் மட்டுமே தேர்வெழுதினர். குருப்-2 முதல்நிலைத் தேர்வில் பொது அறிவு மற்றும் கணிதத்திறன் தொடர்பான 100 கேள்விகளும், பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் தொடர்பான 100 கேள்விகளும் கேட்கப்பட்டன.
ஆளுநர் கேள்வி
இதில் பொது அறிவு பகுதியில் ஆளுநரின் அதிகாரம் குறித்த கேள்வி ஒன்று இடம் பெற்றுள்ளது.
கூற்று A. இந்திய கூட்டாட்சியில் ஆளுநர் அரசின் தலைவர் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதி என்னும் இருவிதமான பணிகளை செய்கிறார்.
காரணம் (R). ஆளுநர் என்ற நிறுவனமே கூட்டாட்சிக்கு எதிரானது.
A. கூற்று (A) சரி ஆனால் காரணம் (R) தவறானது.
B. கூற்று (A) மற்றும் காரணம் (R) சரி. மேலும் கூற்று (A)க்கான சரியான விளக்கமாக காரணம் (R) உள்ளது.
C. கூற்று (A) தவறானது. ஆனால் காரணம் (R) சரி.
D. கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி.. ஆனால் கூற்று (A)க்கான சரியான விளக்கமாக காரணம் (R) இல்லை.
E. விடை தெரியவில்லை என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் சில மாதங்களாக மோதல் போக்கு நடைபெற்று வரும் நிலையில் TNPSC நடத்திய தேர்வில் இவ்வாறான கேள்வி கேட்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.