பள்ளிகளில் சேர மதமாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது - ஆளுநர் ஆர்.என்.ரவி
இந்தியாவின் அடையாளத்தை அழிக்க ஆங்கிலேயர்கள் முயன்றனர் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.
ஆர்.என்.ரவி
சென்னை மயிலாப்பூர் பி.எஸ். கல்விக் குழுமத்தின் 50ஆம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் பேசிய அவர், “இந்தியாவின் வளர்ச்சியையும் எழுச்சியையும் அழிப்பதற்கு ஆங்கிலேயர்கள் மற்றும் கிறிஸ்தவ மத போதகர்கள் முதலில் கல்வி முறையை அழிக்க முயன்றனர். பின்னர் இந்தியாவில் உள்ள இயற்கை வளங்கள், பழமையான புத்தகங்கள் ஆகியவற்றை எடுத்துச் சென்றனர்.
பள்ளியில் சேர மதமாற்றம்
மேலும் இந்திய மக்களின் அடையாளத்தை அவர்கள் மாற்றி அமைக்க அமைத்தனர். ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் அவர்கள் செய்ததை இங்கே செய்ய முயன்றனர். ஆனால் பலிக்கவில்லை. இந்திய மக்களை அடிமையாக்கி அவர்கள் ஆளும் நாடுகளுக்கு கொண்டு சென்று வேலை வாங்கினார்கள்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், பள்ளிக்கூடங்களில் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்றால் மதமாற்றம் செய்ய வேண்டும் என்று நிலை இந்தியாவில் இருந்தது. தமிழகத்திலிருந்து 70,000 பேர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாகாண ஆளுநருக்கு கடிதம் அனுப்பிய பிறகு அது நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்தியாவின் மதிப்பு உலக நாடுகளிடையே இன்று உயர்ந்து வருகிறது. பொருளாதாரத்தில் இந்தியா தொடர்ந்து முன்னேற்ற பாதையில் செல்கிறது. இந்தியாவின் பாஸ்போர்ட்டின் மதிப்பு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. விரைவில் வல்லரசாக இந்தியா மாறும் என்பதில் மாற்று கருத்து இல்லை" என பேசினார்.