10 மாநில ஆளுநர் மாற்றம் - ஆர்.என்.ரவி மாற்றப்படாததன் பின்னணி என்ன?
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா என தகவல் வெளியாகியுள்ளது.
ஆளுநர் மாற்றம்
மத்தியில் 3 வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி அமைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த ஆளுநர்கள மற்றும் துணை நிலை ஆளுநர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
இதன் படி 10 மாநிலம் மற்றும் புதுச்சேரி உட்பட 2 யூனியன் பிரதேசங்களுக்கான ஆளுநர்களை மாற்றி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நியமனங்கள் மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆர்.என்.ரவி
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் நிறைவடையும் நிலையில், தமிழ்நாட்டில் ஆளுநர் மாற்றம் தொடர்பான அறிவிப்புகள் ஏதும் இடம்பெறவில்லை. மத்திய உளவுத்துறையான IB யில் அதிகாரியாகப் பணியாற்றிய ஆர் என் ரவி, 2019 ஆகஸ்ட் மாதம் நாகலாந்து மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அங்கு இரண்டாண்டுகள் பணியாற்றிய நிலையில், தமிழக ஆளுநராக 2021 ம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி நியமிக்கப்பட்டார். இதன்படி நாகலாந்தில் இரண்டு ஆண்டு, தமிழ்நாட்டில் மூன்று ஆண்டு என அவரின் பதவிக்காலம் முடிவடைகிறது.
சமீபத்தில் டெல்லி சென்ற ஆர்.என்.ரவி அங்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசினார். பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் நடைபெற்ற இந்த சந்திப்பு பதவி நீட்டிப்பு தொடர்பாகவே இருக்கும் என தகவல் வெளியானது. தற்போது தமிழ்நாடு ஆளுநர் மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகாத நிலையில் ஏறக்குறைய ஆர்.என்.ரவி பதவி நீட்டிப்பு செய்யப்படவே வாய்ப்புள்ளது.
பதவியில் உள்ள ஆளுநரை 2 வது முறையாக நியமிப்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை எனவும் ஆர்.என்.ரவியை இரண்டாவது முறையாக அவரை மீண்டும் நியமித்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி எச்சரித்துள்ளார்.