கள்ளச் சாராய பலிகள்; மாவட்ட எஸ்.பி சஸ்பெண்ட், சிபிசிஐடி விசாரணை - முதலமைச்சர் தீவிரம்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கள்ளச்சாராய விவகாரம்
விழுப்புரம், மரக்காணம் வம்பா மேடு பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அங்கு கள்ளச் சாராயம் குடித்த 40க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் ஏற்பட்டது. 9 பேர் உயிரிழந்தனர். 36 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், 4 மாவட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். மேலும், நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, செஞ்சி மஸ்தான், தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்றனர். கள்ளச்சாராயம் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் தீவிரம்
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கியும் உத்தரவிட்டார். கள்ளச் சாராயத்தில் மெத்தனால் எரிசாராயத்தை பயன்படுத்தியதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக விளக்கமளித்துள்ளார். மேலும், கள்ளச்சாராய மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும் எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து, ஏற்கனவே இரண்டு காவல் ஆய்வாளர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்ட நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.