ஆளுநர் ரவிக்கு மூக்குடைப்பு; ராஜ்பவனை விட்டு வெளியேறுக - அரசியல் கட்சி தலைவர்கள் கொந்தளிப்பு
ஆளுநர் ஆர்.என். ரவி ராஜ்பவனை விட்டு வெளியேற வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.
ஆளுநர் ஆர்.என். ரவி விவகாரம்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியால் நிறுத்தி வைக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கும் தமது சிறப்பு அதிகாரம் மூலம் ஒப்புதல் அளித்த உச்சநீதிமன்றம், ஒரு மசோதா மீது ஆளுநர் முடிவு எடுப்பதற்கான காலக்கெடுவையும் நிர்ணயித்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பளித்துள்ளது.
இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுநர் பதவியில் நீடிக்கும் தார்மீக தகுதியை ஆர்.என். ரவி இழந்துவிட்டார். உடனடியாக அவர் ராஜ்பவனை விட்டு வெளியேற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகளின் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு புகட்டி இருக்கிற ஒரு பாடம் இது. சனாதன பின்புலத்தில் அரசியல் செய்யும் ஆளுநர்களுக்கு இது ஒரு மறக்க முடியாத பாடமாக அமையும். ஆர்எஸ்எஸ் சிந்தனைகளோடு செயல்படக்கூடிய அனைவருக்குமான ஒரு பாடம், ஆளுநர் ரவிக்கு இது ஒரு மூக்குடைப்பு எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட மசோதாக்களை தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராகவும், அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாகவும், நிறுத்தி வைத்திருந்த ஆளுநருக்கு எதிராக, தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். மாண்புமிகு முதல்வர் அண்ணன் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் இந்த வெற்றி தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களின் உரிமைக்கான வெற்றி என திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.
மேலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தமிழ்நாட்டு அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தர் முதலமைச்சர் தான் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் காலியாக உள்ள 8 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவிகளை விரைந்து நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதன் மூலம் மாணவர்களின் நலன்களை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.