சீமான் போர்களத்தில் நிற்கும் தலைவர்; எப்போதும் ஆதரவுதான் - உருகிய அண்ணாமலை
போர்க்களத்தில் நிற்கக்கூடிய தளபதியாக சீமானை பார்ப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை
செங்கல்பட்டு எஸ்.ஆர்.எம். பல்கலையில் தமிழ்ப் பேராயம் சார்பில் சொல் தமிழா சொல் என்ற நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, சீமானை ஒரு அரசியல் கட்சியின் தலைவர், தலைமை ஒருங்கிணைப்பாளர் என்று கூறுவதைவிட போர்க்களத்தில் நிற்கக்கூடிய தளபதியாகத்தான் நான் என்றுமே சீமானைப் பார்க்கிறேன்.
காரணம் அவருடைய கொள்கை. அதில் அவர் கொண்டுள்ள உறுதிப் பூண்ட நிலைப்பாடு. அதற்காக எதை இழந்தாலும் பரவாயில்லை என்று தைரியமாகப் போர்க்களத்தில் போராடக்கூடிய மாண்பு. இவை தான் தமிழக அரசியலில் சீமானை தனிப்பெரும் தலைவராக உயர்த்தி கொண்டிருப்பதற்கான காரணம்.
போர்க்களத்தின் தளபதி
எனக்கும், சீமான் அண்ணனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நான் தேசியத்தில் தமிழைப் பார்க்கிறேன். அவர் தமிழில் தேசியத்தைப் பார்க்கிறார் அதுதான் அவருக்கும், எனக்கும் உள்ள வித்தியாசம். இருப்பினும், எப்போதும் சீமானுக்கு தொடர்ந்து ஆதராவாக குரல் கொடுப்பதற்கான காரணம் என்ன தெரியுமா.
இன்றைக்கு அரசியலில் நேர்மையும், நெஞ்சுறுதியும் குறைந்திருக்கிறது. அவை இருக்கக்கூடிய ஒரு மனிதன் தான் சீமான். தேசிய கட்சிகள் தேசிய பிரச்சனைகளை முதன்மையாகவும், மாநில நலனை முக்கியமாகவும் வைக்க வேண்டும். மாநில கட்சிகள் மாநில பிரச்சனைகளை முதன்மையாகவும், தேசிய நலனை முக்கியமாகவும் நினைக்க வேண்டும்.
அப்போதுதான் இந்திய அரசியலானது ஆளுமை மிகுந்த மனிதர்களால் நல்லபடியாக மாறும். இன்று இக்கட்டான சூழலில் அரசியல் உள்ளது. பிராந்திய கட்சிகளும், தேசிய கட்சிகளும் உச்சக்கட்டத்துக்குச் செல்லும்போது மக்கள் இடையில் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.