சட்டம் ஒழுங்கை சரிசெய்ய சட்டத்தை கையிலெடுப்பதா? அதிகரிக்கும் திமுக என்கவுண்டர் லிஸ்ட்
தமிழ்நாட்டின் அரசியலை உற்றுநோக்கும் எவருக்கும் "திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை" என்ற எதிர்க்கட்சிகளின் காட்டமான விமர்சனத்தை பற்றி தெரியாமல் இருக்காது.
சட்ட ஒழுங்கு
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் பங்கேற்கும் அனைத்து செய்தியாளர் சந்திப்பிலும் இந்த வாக்கியத்தை பதிவு செய்கிறார். இந்த விமர்சனங்களுக்கு முதல்வர் ஸ்டாலினின் கீழ் இயங்கும் காவல்துறையின் பதில் - என்கவுண்டர்கள். ஆம், தமிழ்நாட்டின் தொன்றுதொட்ட பண்பாடுகளில் ஒன்று என்கவுண்டர்.
சீசிங் ராஜா என்கவுண்டர் செய்யப்பட்டபோது மதுரையை சேர்ந்த ஒரு மனித உரிமை குழுமம் சேகரித்த தகவலின்படி 1998 இற்கு பிறகு தமிழ்நாட்டில் 101 என்கவுண்டர்கள் நடத்தப்பட்டதாகவும் அதில் 125 நபர்கள் இறந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
அந்த கணக்குப்படி சீசிங் ராஜா இறந்தபின் நடந்த என்கவுன்டர்களையும் கணக்கில் எடுத்தால் 131 நபர்கள் இறந்துள்ளதாக கணக்கு வருகிறது. அந்த ரிப்போர்ட்டில் அதிமுக ஆட்சியில் இருந்த 15 வருடத்தில் 69 என்கவுன்ட்டர்கள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் 56 என்று அதில் குறிப்பிட்டு இருந்தாலும், சமீபத்தில் நடந்த என்கவுன்டர்களையும் சேர்த்தால் திமுகவின் 13 வருட ஆட்சிக்காலத்தில் 60-ஐ தாண்டுகிறது. இன்னும் ஓராண்டு ஆட்சி மீதமிருக்கும் நிலையில் திமுக ரெக்கார்டு ப்ரேக் செய்து விடுமோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஏனென்றால், 2021 இல் திமுக ஆட்சிக்கு வந்தலிலுருந்து இப்போது வரை சுமார் 20 க்கும் மேற்பட்ட என்கவுண்டர்கள் நடந்துள்ளன.
முதல்வர் ஸ்டாலின் ஆட்சி கட்டிலில் ஏறிய பின் நடந்த முதல் என்கவுண்டர் - 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த முர்த்து ஜாவின் என்கவுண்டர். ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் மூதாட்டியிடம் கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்கள் நஹீம் அக்தர் மற்றும் முர்த்து ஜா ஷேக் ஆகியோரை கைது செய்ய முயன்றபோது முர்த்து ஜா தன்னிடம் வைத்திருந்த கத்தியால் காவலர் ஒருவரைத் தாக்கினார் எனவும்,
பதில் - என்கவுண்டர்கள்
தற்காப்புக்காக அவரை போலீசார் என்கவுண்டர் செய்ததாகவும் வடக்கு மண்டல காவல் துறைத் தலைவர் சந்தோஷ்குமார், காஞ்சிபுரம் சரக காவல் தலைவர் சத்தியபிரியா ஆகிய இருவரும் செய்தியாளரைச் சந்தித்து விளக்கமளித்தனர். அதே ஆண்டு தனிப்படை போலீசாரால் தேடப்பட்டுவந்த தூத்துக்குடியை சேர்ந்த பிரபல ரவுடி துரைமுருகனை பிடிக்க முயற்சி செய்தபோது துரைமுருகன் காவலர்களை தாக்கியதால் என்கவுண்டரில் கொல்லப்பட்டார்.
2022 ஆம் ஆண்டு என்கவுண்டர் கொலைகளின் எண்ணிக்கை இரட்டிப்பானது. வருடத்தின் முதல் மாதமே தினேஷ் - மொய்தீன் என்ற இரு இளைஞர்கள் செங்கல்பட்டில் காவல்துறையினர் மீது நாட்டுவெடிகுண்டு வீசியதாக என்கவுண்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட இருவரும் செங்கல்பட்டில் பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தவர்கள் என்றும் காதல் விவகாரத்தில் குண்டு வீசியவர்கள் என்றும் காவல்துறை விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
செங்கல்பட்டில் பொதுமக்களுக்கு நிலவி வந்த அச்சத்திற்கு அரசு கொடுத்த பதிலாகவே இந்த என்கவுண்டர் பார்க்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்த இரண்டே மாதங்களில், பிரபல ரவுடி நீராவி முருகனை நெல்லை களக்காடு வனப்பகுதியில் சுற்றி வளைத்தபோது எஸ்.ஐ இசக்கிராஜா உட்பட மூன்று காவலர்களை நீராவி முருகன் வெட்ட முயற்சி செய்ய, நீராவி முருகன் என்கவுண்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
ஆகஸ்டு மாதம் சென்னை குடுவாஞ்சேரியில் போலீசார் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வினோத்-ரமேஷ் என்ற இருவர் என்கவுண்டர் செய்யப்பட்டனர். அதே ஆண்டு, நவம்பர் மாதம் ஏ+ குற்றவாளியும், பிரபல ரவுடியுமான கொம்பன் ஜெகன் சனமங்கலம் காட்டுப்பகுதியில் போலீசாரை வெட்ட முயற்சி செய்தபோது என்கவுண்டரில் கொல்லப்பட்டார். இந்த என்கவுண்டரில் பல சந்தேகங்களை எழுப்பினார் கொம்பன் ஜெகனின் மனைவி.
திமுக ஆட்சிக்கு கரும்புள்ளி
கொம்பன் ஜெகனின் என்கவுண்டர் தான் இம்மாதிரி என்கவுண்டர்கள் ஜோடிக்கப்பட்டவையா என்ற கேள்வியை பொதுமக்கள் மத்தியிலும் எதிர்க்கட்சிகள் மத்தியிலும் எழுப்பியது. இதேபோல 2023 டிசம்பர் மாதம் காஞ்சிபுரத்தில் ரகு என்கின்ற ரகுவரன், பாஷா என்கின்ற அசேன் ஆகிய இருவரும் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்.
என்கவுண்டர் செய்யப்பட்ட இருவரும் சில மணி நேரத்திற்கு முன்பாக காஞ்சிபுரத்தில் நடுரோட்டில் ஒரு நபரை பழிக்குப் பழி வாங்கும் வகையில் கொலை செய்ததாக தகவல். கொம்பன் ஜெகன் என்கவுண்டரில் எழுப்பப்பட்ட அத்தனை சந்தேகங்களும் இதிலும் எழுப்பப்பட்டன!
2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த அதிமுக ஊராட்சி தலைவர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட முத்து சரவணன் என்ற பிரபல ரவுடியை போலீசார் தேடி வந்தனர். ஒக்டோபர் மாதம் அவரை போலீசார் சுற்றிவளைக்கும்போது அவருடன் சரித்திர பதிவேட்டு குற்றவாளி சண்டே சதீஷும் இருந்துள்ளார்.
இருவரையும் பிடித்து சோழவரம் அழைத்துச் செல்லும் வழியில் போலீசாரை தாக்கிவிட்டு அவர்கள் இருவரும் தப்பிக்க முயன்றதால் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இருவரும் உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் பாம்ப் சரவணனின் கூட்டாளிகள் என்று தகவல்கள் வெளியாகின. ஆம், ஆர்ம்ஸ்ட்ரோங் கொலை வழக்கில் காவல்துறையால் சுட்டுப் பிடிக்கப்பட்ட அதே பாம் சரவணன் தான்.
ஆம்ஸ்ட்ரோங் கொலை தமிழ்நாட்டின் வரலாற்றிலும், திமுக ஆட்சிக்கும் ஒரு கரும்புள்ளி. ஆர்ம்ஸ்ட்ரோங் கொலை சம்பவம் அரங்கேறாமல் இருந்திருந்தால் தமிழ்நாட்டில் என்கவுண்டர்கள் எண்ணிக்கை உயர்ந்திருக்காது என்று கூறும் அளவிற்கு, ஆர்ம்ஸ்ட்ரோங் கொலையை ஒட்டி என்கவுன்டர்களை தமிழகம் கண்டது. ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்குப் பிறகு சென்னை பெருநகர காவல் ஆணையராக பொறுப்பேற்ற அருண் ஐபிஎஸ் கொடுத்த முதல் பேட்டியே பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
லாக் அப் டெத்கள்
சென்னை மாநகரத்தில் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட முன்னுரிமை அளிக்கப்படும். ரவுடிகளை கட்டுப்படுத்துவதே என் முதல் பணியாக இருக்கும். போலீஸார் கடமையை சரியாக செய்தாலே, குற்றங்கள் குறையும். ரவுடிகளுக்கு எந்த மொழி புரியுமோ அந்த மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும். என்று அவர் சொன்ன போது ரவுடிகளுக்குப் புரியும் மொழி என்று அவர் எதைச் சொல்கிறார் என்ற கேள்விகள் எழுந்தன.
இது தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் அவரை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது. அருண் ஐபிஎஸ் சார்பாக ஆஜராகிய மூத்த வழக்கறிஞர் வில்சன் "சில ரவுடிகள் தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளை பேசுபவர்களாக இருப்பதால் அவர்கள் மொழியில் பேசுவது என்பது தவறில்லை என்பதால், இது மனித உரிமை மீறல் ஆகாது" என தன் வாதத்தை முன்மொழிந்தார்.
இதை ஏற்றுக்கொண்ட மனித உரிமை ஆணையம் அருண் ஐபிஎஸ் மீது இருந்த வழக்கை நீக்கியது. தெலுங்கோ கன்னடமோ அல்ல,ரவுடிகளுக்கு துப்பாக்கி குண்டுகளின் மொழிதான் புரியும் என்று அதிலிருந்து அந்த மொழியில் அதிகம் பேசத் தொடங்கியது காவல்துறை.
ஆம்ஸ்ட்ரோங் கொலை நடந்து ஒரே வாரம் கழித்து மாதவரத்தில் என்கவுண்டர் செய்யப்பட்டார் திருவேங்கடம். எதிர்க்கட்சிகள் தாண்டி கூட்டணி கட்சித் தலைவர்களே இதை கண்டித்தும் உண்மையான குற்றவாளிகளை சட்டத்திற்கு முன் நிறுத்தவேண்டும் என்றும் குரலெழுப்பினர். ஆனால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று சொல்லும் அளவிற்கு அடுத்தடுத்து பல என்கவுண்டர்கள் அரங்கேறின.
ஆர்ம்ஸ்ட்ரோங் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆற்காடு சுரேஷின் தம்பி பொண்ணை பாலுவுக்கு என்கவுண்டரில் இருந்து பாதுகாப்பு கேட்டு கோரிக்கை மனுவை போலீஸ் கமிஷனரிடம் வழங்கினார், பொண்ணை பாலுவின் மனைவி. இதே சூட்டில் நடந்தது தான் 2024 ஜூலை 11 ஆம் தேதியன்று நடந்த சரித்திர பதிவேட்டு குற்றவாளி துரைசாமியின் என்கவுண்டர். புதுக்கோட்டையில் வம்பன் என்ற கிராமத்தில் பதுங்கியிருந்த துரைசாமியை பிடிக்க முற்படும்பொது துரைசாமி அரிவாளால் தாக்கியதால் என்கவுண்டர் நடந்தது என்று போலீஸார் விளக்கம் கொடுத்தார்கள்.
செப்டம்பர் 18 ஆம் தேதி, பல வருடங்களாக தேடப்படும் குற்றவாளியான காக்காத்தோப்பு பாலாஜியை சென்னை வியாசர்பாடியில் வைத்து என்கவுண்டர் செய்தது காவல்துறை. பாலாஜி போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் அதனாலேயே இந்த என்கவுண்டர் நடந்ததாகவும் போலீசார் விளக்கம் கொடுத்தனர்.
இது இங்கோடு நிற்கவில்லை. சொல்லப்போனால் இங்குதான் இந்த வேட்டை தொடங்கியது. காக்காத்தோப்பு பாலாஜி என்கவுண்டர் நடந்த நான்கே நாட்களில் ஆர்ம்ஸ்ட்ரோங் வழக்கில் தேடப்பட்டுவந்த மற்றொரு சரித்திர பதிவேட்டு குற்றவாளியான சீசிங் ராஜாவை என்கவுண்டர் செய்தது தமிழக காவல்துறை.
ஆந்திராவில் தலைமறைவாக இருந்த சீசிங் ராஜாவை பிடித்து சென்னை நீலாங்கரையில் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள் மறைத்துவைத்திற்கும் இடத்தை காட்ட அழைத்து சென்றபோது திடீரென்று துப்பாக்கியை எடுத்து காவலரை தாக்கியதாகவும் அதனால் என்கவுண்டர் செய்யப்பட்டதாகவும் காவல்துறை கூறியது. ஆனால், சீசிங் ராஜாவின் மனைவி அவர் திருந்தி வாழ்ந்து கொண்டிருந்தாகவும் போலீசார் போலி என்கவுண்டரில் தன் கணவரை கொன்றதாகவும் கண்ணீர் முகத்துடன் கொடுத்த பேட்டி மக்களையும் பல கட்சி தலைவர்களையும் மேலும் சந்தேகங்களுக்கு தள்ளியது.
Extrajudicial Killing
சென்னையில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் முக்கிய குற்றவாளியாக இருந்த ஜாபர் குலாம் ஹுசைன், போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இது நடந்து சில நாட்களிலேயே போலீசை தாக்கியதாக மதுரையை சேர்ந்த சுபாஷ் சந்திரா போஸ் என்கிற 29 வயது குற்றவாளி என்கவுண்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்த என்கவுண்டர் நடந்த இரண்டே நாட்களில் கடலூரில் 20 வயதே ஆன மொட்டை விஜய் பொலிஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். இப்படி, ஒரு என்கவுன்டர் செய்தியிலிருந்து மக்கள் வெளிவருவதற்குள் அடுத்த என்கவுண்டரை அரங்கேற்றி அதனை வாடிக்கையான நிகழ்வாக மாற்றி வருகிறது தமிழ்நாடு காவல்துறை. தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து காவல் நிலையங்களிலும் கழிவறைகள் வழுக்களாகவே உள்ளது.
குற்றவாளிகளை கையாள்வதிலும், அவர்களுக்கு சட்டம் கொடுக்கும் அடிப்படை உரிமைகளை அவர்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் தமிழக காவல்துறை தொடர்ந்து கோட்டைவிட்டு கொண்டிருக்கிறது என்றும் காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய முதல்வர் ஸ்டாலின் அலட்சியமாக இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துகொண்டுள்ளன. சட்டம் ஒழுங்கை சரி செய்ய சட்டத்தை கையிலெடுப்பது நியாயமாகுமா என்பதே அனைவரது மனதிலும் இருக்கும் கேள்வியாக உள்ளது.
என்கவுண்டர் போன்ற Extrajudicial Killingன் இன்னொரு கோரவடிவமாகவே லாக் அப் டெத்கள் நடந்து வருகின்றன. குற்றத்தின் தீவிரத்தன்மை கருதி, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு மாவுக்கட்டு போடப்பட்டதை கொண்டாடுவதின் நீட்சியாகவே என்கவுண்டர் நடக்கின்றன.
சீசிங் ராஜா, திருவேங்கடம் போன்றவர்கள் தப்பு செய்தவர்கள்தானே அவர்கள் சாவதில் தப்பில்லை என என்கவுண்டர்களை பொதுசமூகம் கடந்து சென்றதற்கும் சாத்தான்குளத்தில் இரண்டு அப்பாவிகள் காவல்நிலையத்தில் மரணமடைந்ததற்கு தொடர்பு உண்டு. அரசு, சமூகம் காவல்துறை, என எல்லா தரப்பிலும் மாற்றம் தேவைப்படுகிறது. அந்த மாற்றம் உண்டாகும் வரை என்கவுண்டர் செய்திகள் வருவதைத் தடுக்கும் வழிகள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இல்லை.