வாட்ஸ்அப்பில் வரும் புத்தாண்டு வாழ்த்து மூலம் மோசடி - காவல்துறை எச்சரிக்கை
வாட்சப்பில் வரும் வாழ்த்து செய்தி மூலம் சைபர் மோசடி நடைபெறுவதாக காவல்துறை எச்சரித்துள்ளது.
புத்தாண்டு வாழ்த்து
உலகம் முழுவதும் 2025 ஆம் ஆண்டு புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். 20 வருடங்களுக்கு முன்னர் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதாக இருந்தால் வாழ்த்து மடல் வீட்டிற்கு அனுப்புவார்கள்.
தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் நண்பர்கள், உறவினர்கள் என அனைவருக்கும் ஒரே நேரத்தில் வாட்ஸ்அப் போன்ற சமூகவலைத்தளங்கள் மூலம் டெக்ஸ்ட், போட்டோ, வீடியோ போன்ற வழிகளில் வாழ்த்துகளை பரிமாறி கொள்ள முடிகிறது.
சைபர் மோசடி
இது போன்ற பண்டிகை நாட்களில் பல நாட்கள் தொடர்பில் இல்லாதவர் கூட வாழ்த்து செய்திகளை பரிமாறி கொள்வார்கள். இந்நிலையில் இந்த வாழ்த்து செய்தி மூலம் சைபர் மோசடி நடப்பதாக காவல்துறை எச்சரித்துள்ளது.
இதன்படி, "புத்தாண்டை முன்னிட்டு உங்களது வாட்ஸ்அப் எண்ணிற்கு அறிமுகமில்லாத எண்ணிலிருந்து புத்தாண்டு வாழ்த்துக்கள் என ஒரு apk file அல்லது link செய்தி வரும். அந்த செய்தியில் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து அட்டை அனுப்பலாம் என குறிப்பிடப்பட்டு இருக்கும்.
நீங்கள் அந்த apk file ஐ download செய்துவிட்டால் உங்களது செல்போன் உடனடியாக hack செய்யப்பட்டு உங்களது வங்கி கணக்கு தொடர்பான விபரங்கள் திருடப்பட்டு பண மோசடி செய்து விடுவார்கள். எனவே வாட்ஸ்அப்பில் வரும் இது போன்ற புத்தாண்டு apk file அல்லது link ஐ தவிர்க்க வேண்டும்" என காவல்துறை தெரிவித்துள்ளது.
மோசடியில் தப்பிக்க
இந்த மோசடியானது புத்தாண்டு வாழ்த்து மட்டுமில்லாமல் பரிசு கூப்பன், இலவச டேட்டா, அரசு திட்டங்கள், வங்கி சேவைகள் என பல வழிகளில் இந்த மோசடி நடைபெறுகிறது.
அறிமுகமில்லாத எண்கள் மட்டுமல்லாது, நீங்கள் பதிவு செய்திருந்த எண்களில் இருந்து வந்தால் கூட கிளிக் செய்ய வேண்டாம். உங்களுக்கு தெரிந்தவர்கள் கூட போதிய விழிப்புணர்வு இல்லாமல் இதை உங்களுக்கு Forward செய்ய வாய்ப்புள்ளது.
புகார் அளிக்க
முதலில் வாட்ஸ்அப் செயலியில் உள்ள செட்டிங்கில் ஆட்டோ டவுன்லோடு என்ற அம்சத்தை off செய்யுங்கள். இதன் மூலம் உங்கள் அனுமதியில்லாமல் வாட்ஸ்அப்பில் இருந்து வரும் எந்தவொரு தகவல்களும் உங்கள் மொபைலில்டவுன்லோடு செய்ய முடியாது.
லிங்கை கிளிக் செய்யும் முன்னர் அதன் URL அதிகாரபூர்வமான இணையதளத்தின் லிங்கா என உறுதிப்படுத்தி விட்டு கிளிக் செய்யவும். மொபைல்ஆப் டவுன்லோட் செய்வதாக இருந்தால் வாட்ஸ்அப்பில் வரும் APK File களை டவுன்லோட் செய்ய வேண்டாம். Google அல்லது ஆப்பிள் playstore மூலம் மட்டும் டவுன்லோட் செய்யுங்கள்.
இது போன்று பண மோசடியால் பாதிக்கப்பட்டால் www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உடனடியாக புகார் பதிவு செய்யலாம்.