UPI செயலி பயன்படுத்துபவரா நீங்கள்? புதிய வகை மோசடி குறித்து எச்சரிக்கும் சைபர் போலீஸ்
தமிழ்நாட்டில் யுபிஐ செயலியை பயன்படுத்தி புதிய வகை மோசடி நடைபெறுவதாக போலீசார் எச்சரித்துள்ளனர்.
ஆன்லைன் பரிவர்த்தனை
டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட் போன் இல்லாத மனிதரை காண்பது அரிதிலும் அரிது. குண்டூசி வாங்குவதில் இருந்து தங்கம் வாங்கும் வரை ஆன்லைன் பரிவர்த்தனைக்கு மக்கள் மாறி விட்டனர்.
Google pay, PhonePe போன்ற செயலிகள் மூலம் QR Code ஸ்கேன் செய்து நொடிப்பொழுதில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும்.
புதிய வகை மோசடி
அதே நேரத்தில் இணைய பரிவர்த்தனை மூலம் பல்வேறு வகையான மோசடிகளை சைபர் குற்றவாளிகள் அரங்கேற்றி மக்களிடம் பணம் பறித்து வருகிறார்கள். இந்த வகையான மோசடிகளை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும் நாளுக்கு நாள் சைபர் மோசடி புகார்கள் அதிகரித்து கொண்டேதான் உள்ளது.
தற்போது யுபிஐ செயலியை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நடக்கும் மோசடி குறித்து தமிழ்நாடு சைபர் சைபர் கிரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர். போன் பே (Phonepe) செயலி வழியாக, பொதுமக்களுக்கே தெரியாமல், அவர்களது வங்கி கணக்கில் இருந்து, பணம் மோசடியாக எடுக்கப்படுவதாக நவம்பர் மாதம் மட்டும் 7 புகார்கள் வந்துள்ளன.
போலி செயலி
இது தொடர்பாக நடத்திய விசாரணையில், அனைத்து புகார்களிலும் மோசடி செய்யப்பட்ட தொகைகள் அனைத்தும் Amazon Pay-க்கு மாற்றப்பட்டு இருப்பதாக கண்டறியப்பட்டது. மேலும், PM Kisan Yojna என்ற மத்திய அரசின் திட்டத்தின் பெயரில் போலி மோசடி செயலி பயன்படுத்தபடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியை இன்ஸ்டால் செய்த பின், பயனாளிகளின் SMS பயன்பாட்டையும் மற்றும் சாதனங்களை இயக்குவதையும் கட்டுப்படுத்துகிறது. மோசடிக்காரர்கள் SMS வருவதை தடுத்து அதன்மூலம் UPI செயலிகளில் மாற்றம் செய்து பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு மோசடியாக சேகரிக்கபட்ட தரவுகளை கொண்டு UPI செயலிகளில் பயன்படுத்தி அனுமதி இல்லாத பரிவர்த்தனைகளை மோசடியாக செய்கின்றனர் என தெரிவித்துள்னர்.
விழிப்புணர்வு
இந்த வகையான மோசடிகளிருந்து தற்காத்து கொள்ள , உங்கள் வங்கி கணக்கின் நடவடிக்கைகளை அடிக்கடி கண்காணிக்க வேண்டும் என்றும், ஏதாவது அனுமதியற்ற பரிமாற்றங்கள் குறித்து கண்டுபிடித்தால் உடனடியாக உங்கள் வங்கிக்கு தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மேலும், தெரியாத இணைப்புகளை கிளிக் செய்வது, தேவையில்லாத செய்திகள் அல்லது மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பது, எந்த சூழ்நிலையிலும் முக்கிய UPI தரவுகள் அல்லது OTP-ஐ பகிர்வது, உறுதிப்படுத்தப்படாத ஆதாரங்களில் இருந்து செயலிகளை பதிவிறக்கம் செய்வது ஆகியவற்றை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
நிதி பரிமாற்றங்களுக்கு எப்போதும் அதிகாரப்பூர்வ செயலிகள் மற்றும் இணையதளங்கள் வாயிலாக மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர். சைபர் மோசடியால் பாதிக்கப்பட்டால் 1930 ஐ டயல் செய்து சம்பவத்தைப் புகாரளிக்கவும் அல்லது www.cybercrime.gov.in இணையதளத்தில் உங்களது புகாரைப் பதிவு செய்யவும் என கூறியுள்ளனர்.