இனி இதை புதுமண தம்பதிகளே ஆன்லைனில் செய்யலாம் - தமிழக அரசு
திருமணம் குறித்த முக்கிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
திருமணம்
தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டம் 2009-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இதன்கீழ் தமிழகத்தில் நடைபெறும் திருமணங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
வீடுகள், திருமண மண்டபங்கள் மற்றும் கோவில்களில் நடக்கும் திருமணங்களை பத்திரப்பதிவு அலுவலகங்களில் அதற்கான ஆவணங்களை கொடுத்து பதிவு செய்யலாம். ஆனால், பாஸ்போர்ட் பெறும் தம்பதிகள் மற்றும் காதல் திருமணங்கள் செய்பவர்கள் மட்டுமே பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
ஆன்லைன் பதிவு
தொடர்ந்து இதுகுறித்த ஆய்வில் பொதுமக்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் வரை லஞ்சமாக வசூலிப்பதாக தெரியவந்துள்ளது. எனவே, அரசு பொதுமக்களே நேரடியாக ஆன்லைனில் திருமண பதிவுகளை பதிவு செய்யும் நடைமுறையை கொண்டு வரவுள்ளது.
பத்திர எழுத்தர்கள் மூலமாக அல்லாமல் தாங்களே நேரடியாக வீட்டில் இருந்து பதிவு செய்யலாம். கட்டணத்தையும் அதில் செலுத்தி விடலாம். இந்த திட்டம் முதலில் தமிழ்நாடு திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்பவர்களுக்கு பொருந்தும்.
பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் சிறப்பு திருமணங்கள் போன்றவற்றில் ஏற்கனவே உள்ள நடைமுறைகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.