இந்த 3 இடங்களில் தான் பயணிகளை ஏற்றி இறக்க வேண்டும் - ஆம்னி பேருந்துகளுக்கு அரசு கடும் எச்சரிக்கை!
ஆம்னி பேருந்து விவகாரத்தில் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஆம்னி பேருந்து
தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து தனியார் ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே இயக்கப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இதனை எதிர்த்து தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கில் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோயம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைத்துள்ள கேரேஜ்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும்,
சூரப்பட்டு, போரூர் டோல்கேட்டுகளில் மட்டுமே பயணிகளை இறக்கி, ஏற்றலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த இடைக்கால உத்தரவை எதிர்த்து கோயம்பேட்டில் இருந்தே ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க கோரிதனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அரசு எச்சரிக்கை
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் தனி நீதிபதி இடைக்கால உத்தரவைத்தான் பிறப்பித்துள்ளார். அதற்குள் இந்தவிவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஏன் தலையிட வேண்டும். இடைக்கால உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து, பொதுமக்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவில் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.
இதனையடுத்து, தமிழக அரசின் போக்குவரத்து ஆணையர் பிறப்பித்துள்ள செய்திக்குறிப்பில், “சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் சூரப்பட்டு டோல்கேட், போரூர் டோல்கேட் மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் ஆகிய 3 இடங்களில் மட்டுமே பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும்.
மீறினால் சம்பந்தப்பட்ட உரிமையாளர் களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையும் எடுக்கப்படும்’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.