இனி கோயம்பேட்டிலேயே பயணிகள் ஏறி இறங்கலாம் - நீதிமன்றம் உத்தரவு!
சென்னை ஆம்னி பேருந்துகள் குறித்த முக்கிய தகவலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆம்னி பேருந்துகள்
சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் திறக்கப்பட்டது.
அதன்பின், தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள், மாநில விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் ஆகியவை, கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.
ஆனால், வசதி குறைபாடு காரணமாக கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகளை இயக்க ஆம்னி பேருந்து சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன. இந்நிலையில், அரசின் உத்தரவை எதிர்த்து ஆம்னி பேருந்து சங்கம் சார்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா,
நீதிமன்ற உத்தரவு
இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் வரை, கோயம்பேடு பேருந்து நிலையத்தின் அருகே உள்ள ஆம்னி பேருந்து நிறுவனங்களின் பணிமனைகளிலிருந்து பயணிகளை ஏற்றி இறக்கிக் கொள்ளலாம். போரூர், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளிலும் பயணிகளை ஏற்றிக் கொள்ளலாம்.
அதேநேரத்தில், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பயணிகளை ஏற்றி இறக்காமல் செல்லக் கூடாது.
ஆன்லைன் மற்றும் மொபைல் செயலிகளில் போரூர், சூரப்பட்டு தவிர பயணிகளை ஏற்றி, இறக்குவதற்கு வேறு இடங்களை ஆம்னி பேருந்துகள் குறிப்பிடக்கூடாது. மறு உத்தரவு வரும் வரை இடைக்கால ஏற்பாடுகளை தொடரலாம் என உத்தரவிட்டுள்ளார்.