திருச்செந்தூர் கோவிலில் 168 கிலோ தங்கம்; உருக்கிய அரசு, இனி இவ்வளவு வருமானம் - என்ன காரணம்?
கோவிலுக்கு காணிக்கையாக செலுத்தப்பட்ட தங்கக் கட்டிகள் உருக்கப்பட்டுள்ளது.
கோவில் காணிக்கை
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் உண்டியல் மற்றும் காணிக்கையாக செலுத்திய நகைகளில் இருந்த அரக்கு, அழுக்கு, போலி கற்கள் மற்றும் இதர உலோகங்கள் நீக்கப்பட்டன.
அதன்பின், பிரித்தெடுக்கப்பட்ட பல மாற்று பொன் இனங்கள், மும்பையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான உருக்காலையில் உருக்கப்பட்டு, சுத்த தங்கக் கட்டிகளாக மாற்றப்பட்டன. அவ்வாறு மாற்றப்பட்ட தங்கக் கட்டிகள் தங்கப் பத்திரமாக, பாரத ஸ்டேட் வங்கி மும்பை கிளையில் முதலீடு செய்யப்பட்டன.
முதலீடு
அதற்கான தங்க முதலீட்டு பத்திரத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து, அதிலிருந்து பெறப்படும் வட்டி மூலமாக 3 மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு, ஓய்வுபெற்ற மாண்பமை நீதியரசர்கள் தலைமையிலான குழுக்கள் மூலம் கோவிலுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
இதன் மதிப்பு, 99.77 கோடி ரூபாய். தங்க மதிப்புக்கு வழங்கப்படும் வட்டி வீதம், 2.25 சதவீதம் . இதனால், ஆண்டுக்கு வட்டித் தொகையாக 2.25 கோடி ரூபாய் கிடைக்கும். மேலும், முதலீடு செய்ததன் மூலம் ஆண்டடொன்றுக்கு விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலுக்கு ரூ.24.09 லட்சமும், திருவள்ளூர் மாவட்டம்,
பெரியபாளையம், அருள்மிகு பவானியம்மன் திருக்கோயிலுக்கு ரூ.1.04 கோடியும், திருவேற்காடு, அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலுக்கு ரூ.39.13 லட்சமும், காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு, அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயிலுக்கு ரூ.39.29 லட்சமும் வட்டித் தொகையாக கிடைக்கப் பெறுகிறது.