ஆண்டுக்கு 1 லட்ச பேர் அயோத்தி செல்ல திராவிட அரசு உதவிடணும் - வானதி ஸ்ரீனிவாசன்..!
திராவிட மாடல் அரசு அனைத்து மக்களையும் ஒன்றாக பார்க்கவேண்டும் என வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
வானதி ஸ்ரீனிவாசன்
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்த போது, குப்பை கொட்டிய இடத்தை பூங்காவாக மாற்ற பூமி பூஜை போட்டுள்ளோம் என்று கூறி, மாநகர பகுதிகளில் அதிக பூங்கா உருவாக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்து இயங்கி வருவதாக குறிப்பிட்டார்.
கோவை பாஜகவினர் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான அழைப்பிதழுடன் கோயிலில் பூஜிக்கப்பட்ட அட்சதையை வீடு வீடாக சென்று வழங்கி வருவதாக எடுத்துரைத்த அவர்,
அந்த அட்சதையை மக்கள் ஆர்வமாகவும் பயபக்தியுடன் வாங்கி கொள்கின்றனர் என்றும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை பெரிய திரையில் திரையிடவும், பஜனை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார்.
சமமாக...
தற்போது மக்களிடம் பெரும் மாற்றத்தை பார்ப்பதாக கூறிய வானதி ஸ்ரீனிவாசன், ராமர் பிறந்த இடத்தில் சட்ட பூர்வமாக நியாயமான கோவில் கட்டப்பட்டுள்ளது கோடிக்கணக்கான மக்களுக்கு உற்சாகம் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
ராமர் கோவில் கட்ட காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு இருந்தும், அவர்களது சுய லாபத்திற்காக காங்கிரஸ் கோவில் கட்டுவதை தள்ளி போட்டார்கள் என்று விமர்சனம் செய்து, இது ராமரை வணங்கும் அத்தனை பேருக்கும் பொதுவான கோவில் என்றும் இந்த கும்பாபிஷேகத்தை காங்கிரஸ் புறக்கணித்து இருப்பது கண்டனத்திற்குரியது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆண்டுதோறும் அயோத்திக்கு ஒரு லட்சம் பேர் செல்ல இந்து சமய அறநிலையத் துறை உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தி திராவிட மாடல் அரசு அனைத்து மக்களையும் சமமாக பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.