பள்ளி மாணவர்களிடையே கூல் லிப் போதை - பற்களில் சோதனை செய்ய ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு!
பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப் பழக்கம் தொடர்பாக ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
போதைப் பழக்கம்
கல்வி நிலையங்களில் போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளி மாணவர்களிடையே போதைப் பொருள் பயன்பாடு உள்ளதா என்பதை கண்டறிய ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,
பள்ளிகளுக்கு உத்தரவு
பள்ளிகளுக்கு அருகே உள்ள கடைகளில் ‘கூல் லிப்’ போன்ற போதைப் பொருட்கள் விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய வேண்டும். இது தொடர்பாக மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.
போதைப் பொருள் தொடர்பான கறை மாணவர்களின் பற்களில் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். வாரத்தின் முதல் நாளில் காவல்துறை ஆய்வாளர், உளவியல் நிபுணரை அழைத்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
தேவையான மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும்.
பள்ளிகள் அருகே உள்ள கடைகளில் போதை பொருள் விற்பனை செய்யப்படுவது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.