இனி ஆன்லைன் கேம் விளையாட ஆதார் கட்டாயம்; இவர்களுக்கு தடை - தமிழக அரசு அறிவிப்பு
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் உருவாக்கியுள்ளது.
ஆன்லைன் சூதாட்டம்
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அடிமையாகும் இளைஞர்கள் அதில் இருந்து மீள முடியாமல் பெருமளவு பணத்தை இழக்கிறார்கள். பணத்தை இழந்த விரக்தியில் உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள்.
தமிழகத்தில் 30க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பாமக உள்ளிட்ட கட்சிகள் இதனை தடை செய்யுமாறு தொடர்ந்து குரல் எழுப்பி வந்தன.
ஆன்லைன் விளையாட்டு ஆணையம்
இதனையடுத்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்த நிலையில், இந்த தடையை எதிர்த்து சூதாட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளுக்கு இந்த தடை பொருந்தாது என்று தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கு விசாரணைக்கு வருவதற்குள் ஏறத்தாழ 20 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், ஆன்லைன் விளையாட்டை முறைப்படுத்துவது, விளையாட்டு அளிக்கும் நிறுவனங்களை கண்காணிப்பது போன்ற பணிகளுக்காக தமிழ்நாடு அரசு, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி நசிமுதீன் தலைமையில் தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையத்தை உருவாக்கியது.
கட்டுப்பாடுகள்
இந்த விளையாட்டு ஆணையமானது, ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் சில விதிமுறைகளை உருவாக்கியுள்ளது. இந்த விதிகள் உடனடியாக தமிழ்நாட்டில் அமலுக்கு வருகிறது. இதன்படி 18 வயதுக்குட்பட்டவர்கள் ஆன்லைனில் பணம் கட்டி விளையாட்டுகளில் பங்கேற்பது தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், பணம் கட்டி விளையாடும் விளையாட்டுகளுக்கு ஆதார் அட்டை சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரை ஆன்லைனில் பணம் கட்டி விளையாடும் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.
மேலும், ஒரு மணிநேரத்துக்கு மேல் விளையாடினால் 30 நிமிடங்களுக்கு ஒரு முறை எச்சரிக்கை செய்தி அனுப்ப வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. விளையாடுபவர்கள் பணத்தை டெபாசிட் செய்யும் போது, அவர்களது பண வரம்பு மற்றும் மொத்த செலவுகளைக் காண்பிக்கும் நினைவூட்டல் செய்தியை வழங்க வேண்டும்.