கேம் விளையாடியதை தடுத்ததால் ஆத்திரம் - தாயை குத்தி கொன்ற மகன்
கேம் விளையாடுவதை தடுத்த தாயை மகன் கொலை செய்துள்ளார்.
அல்கா சிங்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மல்காபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்திய கடலோர காவல்படையின் குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வருபவர் ஐசிஜி கமாண்டன்ட் பல்பீர் சிங்.
கடந்த சில நாட்களுக்கு முன் பணி நிமித்தம் காரணமாக ஒடிசா கடற்கரைக்கு சென்றுள்ள நிலையில் அவரது மனைவி அல்கா சிங் (47) தனது இரு மகன்களுடன் வசித்து வந்தார்.
கொலை
கல்லூரியில் 3வது ஆண்டு படிக்கும் அவரது மூத்த மகனான அன்மோல் சிங்(20), bipolar disorder என்னும் நோயால் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. மேலும், இவர் வீடியோ கேம் விளையாடும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார் என கூறப்படுகிறது.
கடந்த ஜனவரி 30 ஆம் தேதி, அவரது தாய் செல்போன் மற்றும் லேப்டாப்பை பறிமுதல் செய்துள்ளார். இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட, ஆத்திரமடைந்த அன்மோல் சிங் தனது தாயை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
கைது
அதனையடுத்து தாயின் உடலை அறையில் வைத்து பூட்டியுள்ளார். அதன் பின்னர் இளைய மகன் கல்லூரி முடித்து வீட்டிற்கு வந்து பார்த்த போது, தாய் கொலை செய்யப்பட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்து, அக்கம்பக்கத்தினருக்கும் காவல்துறைக்கும் தகவல் அளித்துள்ளார்.
விரைந்து வந்த காவல்துறையினர், அல்கா சிங்கின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு அனுப்பியதோடு, அன்மோல் சிங்கை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.