மயோனைஸுக்கு ஓராண்டு தடை; அரசு உத்தரவு - என்ன காரணம்?
மயோனைஸுக்கு ஓராண்டு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
மயோனைஸ்
ஷவர்மா, தந்தூரி போன்ற அசைவ உணவுகள் போன்றவற்றில் மயோனைஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றை பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கின்றனர்.
இந்நிலையில், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் மயோனைஸ் மாசுபடுவதால் முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ்க்கு ஓராண்டு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில், சால்மோனெல்லா டைபிமுரியம், சால்மோனெல்லா என்டிரிடிடிஸ், எஸ்கெரிச்சியா கோலி மற்றும் லிஸ்டீரியா மோனோசைட்டோஜென்ஸ் போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் மயோனஸ் மாசுபடுவதால், முட்டைகளால் செய்யப்பட்ட மயோனைஸ் உணவு மூலம் நோய்கள் பரவும் ஆபத்து அதிக அளவில் ஏற்பட்டுள்ளது.
ஓராண்டு தடை
முட்டையில் செய்யக்கூடிய மயோனைஸில் ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய ஆபத்து மிக அதிகமாக இருப்பதாலும், சில உணவகங்களில் மயோனைஸ் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டு சேமிக்கப்படுவதால் மக்களுக்கு உடல்நலக்குறைவை ஏற்படுத்தும். ஏப்ரல் 8ஆம் தேதியிலிருந்து ஓராண்டு இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும்.
இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது அபராதம் மற்றும் உரிமம் ரத்து போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தெலங்கானாவில் மயோனைஸ் சாப்பிட்ட ஒருவர் உயிரிழந்த நிலையில், அம்மாநிலத்திலும் ஓராண்டிற்கு மயோனைஸிற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.