காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவி பளீர்
காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி
கோவையில், தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துக் கொண்டார். அப்போது பேசிய அவர், கார் சிலிண்டர் வெடித்த சம்பவத்தை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொண்டு கடந்துவிட முடியாது. இது முழுக்க முழுக்க பயங்கரவாத தாக்குதல்.
இந்த பயங்கரவாத சம்பவத்தில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக புலனாய்வு செய்து குற்றவாளிகளை கைது செய்துள்ளார்கள், தமிழ்நாடு காவல்துறையின் இந்த சம்பவம் பாராட்டுக்கு உரியது. ஆனால், ஏன் இந்த வழக்கை 4 நாட்கள் கழித்து என்.ஐ.ஏ அமைப்பிடம் காலம் தாழ்த்தி ஒப்படைத்தார்கள் என்றும் கேள்வியெழுப்பினார்.
சிறப்பாக செயல்படும் காவல்துறை
தமிழ்நாடு காவல்துறைக்கு என்.ஐ.ஏவை அழைத்து விசாரிக்க சொல்லும் அதிகாரம் இல்லையென்றும் ஆனால் அந்த முடிவை எடுத்தவர்கள் காலம் தாழ்த்தி எடுத்துள்ளார்கள் எனவும், இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையில் நேரம் என்பது மிக மிக முக்கியம் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து, இந்தியாவிலேயே மிகச் சிறந்த அமைப்பாக தமிழ்நாடு காவல்துறை திகழ்கிறது. தான் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தபோது, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தொடர்பான தரவுகளையும் ஆதாரங்களையும் மற்ற மாநில காவல்துறையினரை காட்டிலும் தமிழக காவல்துறையினர் துல்லியமாக தந்தனர்.
தமிழ்நாடு காவல்துறை சுதந்திரமாக செயல்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது எனவே, அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.