கொளுத்தும் கோடை வெயில்; தடையில்லா குடிநீருக்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு - முதல்வர் அறிவிப்பு!
கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தடையற்ற குடிநீர் வழங்க ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ரூ.150 கோடி
இந்த ஆண்டின் கோடை வெயில் கடந்த ஆண்டுகளை விடவும் அதிகமாக சுட்டெரித்து வருகிறது. இதை தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் இருப்பதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஏற்பட்ட மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்புகான நிவாரண நிதியாக ரூ.285 கோடி மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது. இதனையடுத்து,கோடை காலத்தில் பொது மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.
அதில், "தென்மேற்கு பருவமழை காலத்திலும், முதல் ஓரிரு மாதங்களில் மழையளவு எதிர்பார்ப்பதை விட குறைவாகவே இருக்கக் கூடும் என்று இந்திய வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. ஆகவே, தற்போது அணைகளில் உள்ள நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, அடுத்த இரண்டு மாதங்களுக்கு குடிநீர்த் தேவையை நிறைவு செய்ய வேண்டியுள்ளது.
முதல்வர் அறிவிப்பு
இதனை கருத்தில் கொண்டு அனைத்துத் துறை அலுவலர்களும் கவனமாக செயல்பட்டு குடிநீர் பிரச்சினை நிலவக்கூடிய அனைத்து பகுதிகளுக்கும் சென்று, உடனடியாகத் தீர்வு காண வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 22 மாவட்டங்கள் வறட்சியால் குடிநீர் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு,
மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 150 கோடி ரூபாய் குடிநீர் விநியோகப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை தேவைக்கேற்ப மாவட்டங்களுக்கு பிரித்தளித்து, குடிநீர் வழங்கல் பணிகளையும், லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களும், நகராட்சி நிர்வாக துறை செயலாளர் உள்ளிட்ட துறை அலுவலர்களும், தற்போது செயல்பட்டு வரும் பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்களின் செயல்பாட்டைத் தொடர்ந்து கண்காணித்து, தடைகளின்றி பராமரித்திட வேண்டும்.
இந்த கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் நீரேற்று நிலையங்கள் தடையின்றி தொடர்ந்து செயல்படுத்துவதற்கு, சீரான, தடை இல்லாத மின்சாரம் அவசியம். எனவே இத்தகைய திட்டப்பணிகளுக்கு மின்சாரம் தடை இன்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஊராட்சிப் பகுதிகளில், சிறிய குடிநீர் திட்டங்கள் மூலம் பயன்பெறக்கூடிய பல கிராமங்களில், ஆழ்துளை கிணறுகள் வறண்டு இருக்கின்றன. இவற்றுக்கு பதிலாக வேறு குடிநீர் ஆதாரங்களில் இருந்தோ அல்லது லாரிகள் மூலம் மக்களுக்கு குடிநீர் கிடைக்கப் பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.