20 -ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் - அண்ணாமலை பரபரப்பு அறிவிப்பு!
வரும் ஆகஸ்ட் 20 முதல், தொடர் உண்ணாவிரதப் போராட்டஇத்தை தொடங்க இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அத்திக்கடவு-அவிநாசி திட்டம்
ஈரோடு மாவட்டம், சோளிபாளையம் பகுதியில் அமைந்துள்ள அவிநாசி அத்திக்கடவு திட்டத்தின் 3-ஆவது நீருந்து நிலையத்தை அண்ணாமலை பார்வையிட்டார்.பின்னர் செய்தியளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர் ,''திமுக ஆட்சிக்கு வந்து கடந்த 39 மாதங்களாக, அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் காலதாமதமாக்கி வருகிறார்கள்.
கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து, அமைச்சர்கள், ஆளுக்கொரு பணி நிறைவு சதவீதத்தைக் கூறி பொதுமக்களையும், விவசாயிகளையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமின்றி, இந்தத் திட்டத்திற்காகக் குழாய் அமைக்க நிலம் கொடுத்த விவசாயிகளுக்கான நிதியையும் இதுவரையிலும் வழங்கவில்லை.
உண்மையில், அவிநாசி அத்திக்கடவு திட்டத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. கடந்த 39 மாதங்களில், இது வரை பலமுறை திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போகிறோம் என்று கூறி திசைதிருப்புவதிலேயே குறியாக இருக்கிறார்களே தவிர, எதனால் இன்று வரை இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை என்பதை, பொதுமக்களுக்குத் தெரிவிக்க, திமுக அரசு கடமைப்பட்டுள்ளது.
உண்ணாவிரதப் போராட்டம்
அது மட்டுமின்றி, மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2021 ஆம் ஆண்டு கொண்டு வந்த தேசிய அணைகள் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில், தமிழ்நாடு அணைகள் பாதுகாப்புக் குழுவை உருவாக்கியிருக்க வேண்டும்.
பவானிசாகர், ஆழியாறு, திருமூர்த்தி அணை, அமராவதி அணை உள்ளிட்ட பல தமிழக அணைகள், போதிய பராமரிப்பின்றி இருக்கின்றன. தமிழக அணைகளைப் பராமரிப்பதும், பாதுகாத்துக் கண்காணிப்பதும்தான் இந்தக் குழுவின் பணி. ஆனால், மூன்று ஆண்டுகள் கடந்தும், இதுவரை திமுக அரசு, இந்தக் குழுவை அமைக்கவில்லை.
உடனடியாக, அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என்றும், குழாய் அமைக்க நிலம் வழங்கிய விவசாயிகளுக்குச் சேர வேண்டிய நிதியை, இன்னும் ஒரு வாரக் காலத்திற்குள் வழங்க வேண்டும் என்றும்,
தேசிய அணைகள் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில், தமிழக அணைகள் பாதுகாப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறோம்.
இவற்றை நிறைவேற்ற திமுக அரசு தவறினால், வரும் ஆகஸ்ட் 20 முதல், தமிழக பாஜக சார்பாக, தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.