பல்கலைக்கழகங்களை மாநில அரசிடமிருந்து அபகரிக்க முயற்சி - முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
யுஜிசி புதிய விதி
பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் நியமிப்பது தொடர்பான விதிகளில் திருத்தம் செய்து புதிய வரவை வெளியிட்டுள்ளது பல்கலைக்கழக மானிய குழு.
இதில், பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் செய்வதற்காக தேடுதல் குழுவில் மாநிலஅரசு சார்பில் உறுப்பினர்கள் நியமிக்க முடியாது, கல்வியாளர்கள் அல்லாதவர்களையும் துணைவேந்தராக நியமிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
சட்டசபையில் தீர்மானம்
இதற்கு முன்னதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இன்று யுஜிசி வெளியிட்ட புதிய விதிகளை திரும்ப பெற வலியுறுத்தி சட்டசபையில் தனி தீர்மானம் கொண்டு வந்தார்.
இதை தொடர்ந்து இந்த தீர்மானத்தின் மீது பேசிய அவர், "துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநர் கையில் கொடுப்பது பல்கலைகழகங்களை சிதைக்கும் காரியமாகத்தான் முடியும். தன்னிச்சையாக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிக அதிகாரங்களை ஆளுநர்களுக்கு வழங்குவது சரியும் அல்ல முறையும் அல்ல.
இந்த விதிமுறை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. மாநில உரிமைகளில் தலையிடுவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை சிறுமைப்படுத்தும் செயல். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம்தான் கல்வி தொடர்பான அதிகாரம் இருக்க வேண்டும்.
முறைகேட்டில் நம்பர் 1
அப்படி இருந்தால் தான், அனைத்து மக்களுக்குமான கல்வியை முழுமையாக கொடுக்க முடியும். நியமன பதவிகளில் ஒரு சில ஆண்டுகள் இருந்துவிட்டு செல்பவர்களுக்கு, ஒரு மாநில மக்களின் அடிப்படை உணர்வை புரிந்து கொள்ள இயலாது.
இவர்களாக ஒரு உத்தரவை போட்டுவிட்டு இதனை அமல்படுத்துதாத கல்வி நிறுவனங்கள் UGC திட்டங்களில் பங்கேற்க முடியாது என்று சொல்வது அநியாயம் அல்லவா? அதுவும் பட்டங்களை வழங்க முடியாது என்று சொல்வது பகீரங்க மிரட்டல் அல்லவா? மாநில அரசுகள் தங்கள் பொருளாதார பலத்தில் கட்டிய பல்கலைக்கழகங்களை அபகரித்து கொள்கிற அக்கிரமான முயற்சியாகவே இதனை கருத வேண்டி உள்ளது.
பள்ளிக் கல்வியை சிதைக்கவே புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்து திணிக்கிறார்கள். பொதுத் தேர்வு என்ற பெயரால் வடிகட்டி அனைவரையும் கல்வியை தொடர முடியாமல் செய்யப் போகிறார்கள். நீட் தேர்வு மூலம் மருத்துவக் கனவை சிதைக்கும் காரியத்தை பல ஆண்டுகளாக செய்து வருகிறார்கள். தங்கை அனிதா உள்ளிட்ட எத்தனையோ உயிர்களை இழந்தோம். ஆனால், ஆண்டுதோறும் வினாத்தாள் கசிவு, மதிப்பெண் குளறுபடி என முறைகேடு நடப்பதில் நம்பர்.1 தேர்வாக நீர் தேர்வு இருக்கிறது.
அதிமுக ஆதரவு
இதேபோல் பல்கலைக்கழகத்தை சிதைக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கிவிட்டது. தலைச்சிறந்த கல்வி நிறுவனங்களை நாட்டிலேயே அதிகமாக கொண்டிருக்கும் தமிழ்நாடு நமது கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி பறிக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்காது. அப்படி இருக்கவும் முடியாது.
கல்வியும், மக்களையும், எதிர்கால தலைமுறையினரையும் காக்க தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒட்டுமொத்தமாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியாக வேண்டும். தீர்மானத்தை ஏற்று ஒன்றிய அரசு மனம் மாறாவிட்டால் மக்கள் மன்றத்தையும், நீதிமன்றத்தையும் நாடுவோம். " என பேசினார்.
இந்நிலையில் இந்த தீர்மானத்தை ஏற்க முடியாது என கூறி பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அதே வேளையில் அதிமுக இந்த தீர்மானத்தை ஆதரித்துள்ளது. அதே வேளையில் அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சிகள் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த தீர்மானத்தை ஆதரித்துள்ளத்து. இதனையடுத்து இந்த தீர்மானம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.