மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்க்கச் சென்ற பயணிகள் - மாயமான நீர்மூழ்கி கப்பல்!
டைட்டானிக் கப்பலை பார்வையிடச் சென்ற சுற்றுலாப் பயணிகளின் நீர்மூழ்கி கப்பல் மாயமாகியுள்ளது.
டைட்டானிக் கப்பல்
ஆர்எம்எஸ் டைட்டானிக் என்ற சொகுசு கப்பல் ஏப்ரல் 15, 1912ல் பனிப்பாறையில் மோதி வடக்கு அட்லாண்டிக் கடலில் மூழ்கியது. அதில் இருந்த 2,224 பேரில் 1,500க்கும் மேற்பட்டோர் இறந்ததாக கூறப்படுகிறது.
அதன்பின், 1985ல் கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது, கடல் மட்டத்திற்கு கீழே சுமார் 3,800 மீட்டரில் (12,500 அடி) கப்பல் உள்ளது. பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலைப் பயன்படுத்தினால் மட்டுமே கப்பலின் இடிபாடுகளை காண முடியும்.
நீர்மூழ்கி கப்பல் மாயம்
நீர்மூழ்கிக் கப்பல்கள் சுற்றுலாப் பயணிகளையும் நிபுணர்களையும் ஆழ்கடலுக்கு கட்டணம் செலுத்தி அழைத்துச் செல்கின்றன. இந்நிலையில், இதனை பார்ப்பதற்காக சுற்றுலாப்பயணிகளை அழைத்துச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் கடலில் திடீரென மாயமாகி விட்டதாக அமெரிக்க கடலோரக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.
இதில் 5 பயணிகள் இருந்துள்ளனர்.
கப்பலில் பயணித்த அனைவரையும் பத்திரமாக கரைக்கு அழைத்து வர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தனியார் நிறுவனமான ஓசன் கேட் நிறுவனத்திற்கு சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது.