திருப்பதி தேவஸ்தானத்தில் தீ விபத்து; முக்கிய ஆவணங்கள் நாசம் - அதிர்ச்சி தகவல்!
திருப்பதி தேவஸ்தான அலுவலக தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்துள்ளது.
தீ விபத்து
திருப்பதி தேவஸ்தான பொறியாளர் பாஸ்கர் அலுவலகத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், ஏராளமான ஆவணங்கள் எரிந்து விட்டன.
தேவஸ்தான துணை கோவில்கள் மற்றும் சாலைப் பணிகள் ஆகியவை தொடர்பான ஆவணங்களும் எரிந்துள்ளது. உடனே, பாதுகாப்பு பணியில் இருந்த ஊழியர்கள் உள்ளே சென்று தீ அணைப்பு உபகரணங்களை பயன்படுத்தி தீயை அணைத்துள்ளனர்.
இதனால் ஏற்படவிருந்த பெரும் தீ விபத்து தடுத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, தேவஸ்தான முதன்மை கண்காணிப்பு அதிகாரி ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் தீ விபத்து நடந்த பொறியாளர் பாஸ்கர் சேம்பரை ஆய்வு செய்து பின் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
சதி செயலா?
விசாரணையில், சனிக்கிழமை பெருமாளுக்கு உரியது என்பதால் பொறியாளர் பாஸ்கர் தனது அலுவலக சேம்பரில் ஊழியர்களுடன் சாமி கும்பிட்டு விளக்கு ஏற்றி வைத்திருந்தார். அந்த விளக்கிலிருந்து பரவிய தீயே தீ விபத்திற்கு காரணம் என்று தேவஸ்தான அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதற்கிடையில், திருமலையில் சாலைகள் போட்டதில் மோசடி நடந்திருப்பதாக ஆந்திர சிஐடி பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சாலை பணிகள் குறித்த ஆவணங்கள் தீயில் எரிந்து உள்ளன.
எனவே, தீ பிடித்த விவகாரம் விபத்தா? அல்லது திட்டமிட்ட செயலா? என தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.